வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: வெறுப்பு பேச்சு தொடர்பாக புகார் அளிக்காவிட்டாலும், நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய தவறினால், நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் எனவும் எச்சரித்து உள்ளது.
வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கை தொடர்ந்தவர்கள், அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் எனக்கோரியிருந்தனர். முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மாவட்டத்திற்கு ஒரு அதிகாரியை நியமிக்கலாம் என நீதிபதிகள் பரிந்துரை வழங்கியிருந்தனர்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கேஎம் ஜோசப் மற்றும் நாகரத்னா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: வெறுப்பு பேச்சு தொடர்பாக கடந்த 2022ம் ஆண்டு மாநில அரசுகள் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தோம். வெறுப்பு பேச்சு தொடர்பாக யாரும் புகார் அளிக்காவிட்டாலும், தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய பேச்சுகள், நாட்டின் மதசார்பற்ற தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. வழக்குப்பதிவு செய்ய தவறினால், அதனை நீதிமன்ற அவமதிப்பாக கருத நேரிடும். நாட்டின் மதசார்பற்ற தன்மையை பாதுகாக்க, பேசியவரின் மதம் குறித்து பொருட்படுத்தாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நீதிபதிகள் அரசியல்சார்பற்றவர்கள். எந்த கட்சி குறித்தும் கவலைப்படுவது கிடையாது. அவர்கள் மனதில் உள்ள எண்ணம் அனைத்தும், இந்திய அரசியல்சாசனத்தை பாதுகாப்பது மட்டுமே. பொது நலன் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிறுவுவதற்காக, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வெறுப்பு பேச்சுக்கு எதிரான மனுக்களை நீதிமன்றம் பரிசீலனை செய்து வருகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
இந்த மனு மீதான விசாரணையை மே 12ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement