வேங்கைவயல் | டிஎன்ஏ பரிசோதனைக்கான உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்கு: சிபிசிஐடி பதிலளிக்க  உத்தரவு

மதுரை: வேங்கைவயல் விவகாரத்தில், 11 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்தும் புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர், சிபிசிஐடி பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “வேங்கைவயல் கிராமத்தில் மூன்று தலைமுறைகளாக வசிக்கிறோம். தற்போது கள மேலாளராக பணியாற்றுகிறேன். நான் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர். 2022 டிசம்பர் 26ம் தேதி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் உள்ளிட்ட கழிவுகள் கலந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு விதமான தீண்டாமைகள் நடக்கும் சூழலில், இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி துணை காவல் ஆய்வாளர், தவறு செய்தவர்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபடாமல், தொடர்ச்சியாக பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்களை குற்றவாளிகளாக்க முயன்றார். விசாரணை என்னும் பெயரில் தொடர்ச்சியாக தொந்தரவு செய்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக என்னையும், இதில் எவ்விதத்திலும் தொடர்பு இல்லாத சுபா என்பவரையும் டிஎன்ஏ பரிசோதனைக்கு வருமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இது தனிநபரின் உரிமை மற்றும் சுதந்திரத்திற்கு எதிரானது வேங்கைவயலில் நடந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். ஆனால் சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் என் மீது குற்றம் சுமத்தும் நோக்கில் தொடர்ச்சியாக தொல்லை செய்து, மிரட்டுகிறார்.

குடிநீர் தொட்டியில் இருந்து மாதிரி எப்போது எடுக்கப்பட்டது? எவ்வளவு எடுக்கப்பட்டது? அதன் நிறம் உள்ளிட்ட விவரங்கள் முறையாக குறிப்பிடப்படவில்லை. டிஎன்ஏ பரிசோதனைக்கு போதுமான அளவு மாதிரி கிடைத்ததா? என்பதும் உறுதி செய்யப்படவில்லை.

டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்காக அழைக்கப்பட்ட 11 பேரில் 9 நபர்கள் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்கள். இது பாதிக்கப்பட்ட பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களையே, குற்றவாளிகளாக்க நடக்கும் முயற்சியை உறுதிப்படுத்துகிறது. குற்றம் உறுதி செய்யப்படாமல் தனி நபர்களை டிஎன்ஏ பரிசோதனைக்கு கட்டாயப்படுத்துவது, தனி மனித உரிமைக்கு எதிரானது.

மாதிரி சேகரிக்கப்பட்டது, டிஎன்ஏ பரிசோதனை செய்வது போன்றவை வெளிப்படைத் தன்மையுடன் நடக்கவில்லை.

எனவே டிஎன்ஏ பரிசோதனை செய்வது தொடர்பாக புதுக்கோட்டை எஸ்.சி, எஸ்.டி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதோடு, என்னை டிஎன்ஏ பரிசோதனைக்கு வருமாறு கட்டாயப் படுத்தக்கூடாது என உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன், வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வேங்கைவயல் வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூன்1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.