நீலகிரி: முதுமலை யானைகள் முகாமில் வளர்ப்பு யானை ஒன்று தாக்கியதில் பாகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலையில் தொப்பக்காடு யானை முகாம் இருக்கிறது. இங்கே பல யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவணப்படமும் இங்கே தான் எடுக்கப்பட்டது.
இங்கு ஏகப்பட்ட யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. யானைகளின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்க வனவிலங்கு மருத்துவர்களும் உடன் இருப்பார்கள். யானை ஆரோக்கியத்தைப் பொறுத்தே அதற்கான உணவும் கணக்கிட்டு வழங்கப்படுகிறது.
யானைகள்: இங்கே யானைகளின் ஆரோக்கியம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டே வருகிறது. இப்போது அங்கே சுமார் 28 யானைகள் இருக்கிறது. இதனிடையே இந்த யானைகள் காப்பகத்தில் மசினி என்ற யானை தாக்கி அதன் பாகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் இருக்கும் மசினி யானைக்கு இன்று காலை வழக்கம் போல உணவு வழங்கப்பட்டது. யானைக்கு அதன் பாகன் பாலன் என்பவர் தான் உணவை அளித்துள்ளார். அப்போது திடீரென பாகனை மசினி யானை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் 55 வயதான பிரசாந்த் பாலன் படுகாயமடைந்தார்.
மருத்துவமனை: பலத்த காயமடைந்த அவர் அங்கே இருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் முன்பே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அங்கே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
அதேநேரம் மசினி யானை இதுபோல பாகனைத் தாக்குவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த 2019ல் சமயபுரம் கோயிலில் மசினி யானை இருந்த போது, சமயபுரம் மாரியம்மன் கோயில் விழாக் காலத்தில் மசினி யானைக்கு மதம் பிடித்தது. இதனால் அந்த யானை கோயில் வளாகத்தைச் சுற்றிக் கொண்டிருந்தது. அப்போது யானையை அதன் பாகன் சமாதானப்படுத்த முயன்ற போது, அது அவரை தூக்கிப் போட்டது.
மசினி யானை: இதில் அப்போது மசினி யானைப் பாகனாக இருந்த கஜேந்திரன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன் பின்னரே மசினி யானையைக் கோயிலில் இருந்து முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்குக் கொண்டு வர அவர்கள் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் சில ஆண்டுகளாக மசினி யானை முதுமலை யானைகள் காப்பகத்திலேயே வளர்க்கப்பட்டு வந்தது. அதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தே வந்தனர். இந்த காலகட்டத்தில் மசினி யானையால் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமலேயே இருந்தது. இந்தச் சூழலில் மீண்டும் அதே மசினி யானைப் பாகனைத் தூக்கி எறிந்து கொன்றுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.