ஸ்ரீவில்லிபுத்தூர்: சிறுமிகளுக்குப் பாலியல் தொந்தரவு… கூலித்தொழிலாளிக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை!

இரண்டு சிறுமிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்த கூலித்தொழிலாளிக்கு, வாழ்நாள் சிறைத் தண்டனை அளித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இது குறித்து நம்மிடம் பேசிய அரசு சிறப்பு வழக்கறிஞர் ஜெ.கலா, “காரியாப்பட்டி தாலுகா, அரசகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன் (59). கூலித்தொழிலாளியான இவர், மது போதைக்கு அடிமையானவர். இந்த நிலையில், 19.11.2022 அன்று அந்தப் பகுதியிலுள்ள மந்தைவெளிக்கு மதுபோதையில் தனசேகரன் சென்றிருக்கிறார். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகள் இருவரைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று, அவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார்.

சிறை

இது தொடர்பாக சிறுமிகளின் பெற்றோர் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனசேகரன்மீது புகாரளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவுசெய்த போலீஸார், விசாரணை நடத்தி தனசேகரனைக் கைதுசெய்தனர். இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பூரண ஜெயஆனந்த் இன்று அதிரடியாக தீர்ப்பு கூறினார். அவர் தன் தீர்ப்பில், `குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட தனசேகரனுக்கு, வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை’ எனக் கூறினார். மேலும் தனசேகரனுக்கு 10,000 ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வீதம், நிவாரணத் தொகையும் வழங்க வேண்டும் எனக் கூறினார்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.