சென்னை: பருத்தி வீரன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி.
தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடித்து ரசிகர்களை மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், கார்த்திக்கும் காமெடி நடிகர் சந்தானத்துக்கும் இடையே படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சினை குறித்து தற்போது தெரியவந்துள்ளது.
முக்கியமாக இந்தப் பிரச்சினைக்குப் பிறகு கார்த்தி, சந்தானம் இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தானத்துடன் நடிக்க கார்த்தி மறுப்பு:அமீர் இயக்கிய பருத்தி வீரன் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் கார்த்தி. திரையுலகில் அறிமுகமாகி 15 ஆண்டுகளில் கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருகிறார் கார்த்தி. கடந்தாண்டு விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து மாஸ் காட்டியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து 2023ம் ஆண்டிலும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் தனது வெற்றிப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். இன்று வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு சிறப்பான ஓபனிங் கிடைத்துள்ளது. இந்நிலையில், சந்தானத்துடன் நடிக்க மறுத்து இயக்குநருடன் கார்த்தி சண்டை போட்டது பற்றி தற்போது தெரியவந்துள்ளது.
கார்த்தி முதன்முதலாக போலீஸ் கேரக்டரில் நடித்த திரைப்படம் சிறுத்தை. சிவா இயக்கத்தில் வெளியான இந்தப் படம் கார்த்தி கேரியரில் முதல் ஆக்ஷன் ட்ரீட்டாக அமைந்தது. அதேநேரம் சந்தானத்தின் காமெடியும் சிறுத்தை படத்தில் அதிகம் பேசப்பட்டது. இதில் கார்த்தி – சந்தானம் இருவருக்குமான காட்சிகள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து கார்த்தி – சந்தானம் இருவரும் சகுனி படத்தில் நடித்திருந்தனர். 2012ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் கார்த்தி, சந்தானத்தின் காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. அதேபோல், அலெக்ஸ் பாண்டியன் படத்திலும் இருவரும் காமெடியில் கலக்கியிருந்தனர். ஆனால் அலெக்ஸ் பாண்டியனுக்குப் பின்னர் இருவரும் ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் நடித்தனர்.
எம் ராஜேஷ் இயக்கிய இந்தப் படத்தில் கார்த்தி, சந்தானம் ஆகியோருடன் காஜல் அகர்வால், பிரபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ராஜேஷின் படங்களில் வழக்கமாக ஹீரோக்களை விட சந்தானம் தான் காமெடியில் பிரித்து மேய்வார். அதே ஃபார்முளாவில் தான் ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்திலும் சந்தானம் கார்த்தியை வச்சு செய்திருப்பார்.
ஒருகட்டத்தில் சந்தானத்தின் நக்கலும் காமெடியும் அதிகமாக கார்த்தி டென்ஷனாகிவிட்டாராம். படப்பிடிப்பிலேயே இயக்குநர் எம் ராஜேஷிடம் சண்டை போட்ட கார்த்தி, இனி சந்தானத்துடன் இணைந்து நடிக்கவும் மாட்டேன் என்றுள்ளார். அவர் சொன்னதைப் போலவே ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்திற்குப் பிறகு சந்தானத்துடன் கார்த்தி சேர்ந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கவுண்டமணியின் பாணியை அப்படியே ஃபாலோ செய்யும் சந்தானம், முன்னணி ஹீரோக்களை சகட்டுமேனிக்கு கலாய்ப்பது வழக்கம். அதனால் சில முன்னணி நடிகர்கள் இவர்களை தங்களின் படங்களில் நடிக்க வாய்ப்புக் கொடுப்பதில்லை. சிலநேரங்களில் இப்படி படப்பிடிப்பில் தகராறு ஆன பின்னர் பிரிந்ததும் உண்டு. அந்த வரிசையில் கார்த்தியும் சந்தானமும் பிரிந்தது குறிப்பிடத்தக்கது.