சென்னை: Samantha’S Birthday (சமந்தாவின் பிறந்தநாள்) சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு பெப்ஸி நிறுவனம் வெளியிட்டிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. தமிழில் விஜய்யுடன் தெறி, மெர்சல், சூர்யாவுடன் அஞ்சான், விக்ரமுடன் பத்து எண்றதுக்குள்ள போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு தெலுங்குக்கு சென்ற அவர் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவுடன் நடித்ததன் மூலம் வெகு பிரபலமடைந்து அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார்.
காதல், திருமணம், பிரிவு: விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இரு வீட்டார் சம்மதத்துடன் கோவாவில் கடந்த 2017ஆம் ஆண்டு பிரமாண்டமாக நடந்தது. திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்திவந்தார். சுமூகமாக போய்க்கொண்டிருந்த நாக சைதன்யா – சமந்தாவின் திருமண வாழ்க்கை சில வருடங்களுக்கு முன்னர் பிரிவில் முடிந்தது.
உச்சம் சென்ற சமந்தா: இதற்கிடையே ஃபேமிலி மேன் வெப் சீரிஸின் இரண்டாம் பாகத்தில் நடித்தார் சமந்தா. இதன் மூலம் பாலிவுட்டிலும் அனைவராலும் அறியப்படும் ஹீரோயினாக மாறினார். அதேபோல் பான் இந்தியா படமாக வெளியான புஷ்பாவில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு அவர் போட்ட ஆட்டம் இந்திய அளவில் சென்சேஷனல் ஆனது. தொடர்ந்து ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கும் கமிட்டாகியிருந்தார் சமந்தா.

மயோசிடிஸ் நோய்: இப்படிப்பட்ட சூழலில் அவருக்கு அரியவகை நோயான மயோசிடிஸ் நோய் வந்தது. இதன் காரணமாக நடிப்பிலிருந்து பிரேக் எடுத்த அவர் தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்டார். பல மாத சிகிச்சைக்கு பின் நலம் பெற்ற அவர், சமீபத்தில் சாகுந்தலம் படத்தில் நடித்திருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. மேலும் சமந்தாவின் கேரியரில் மோசமான தோல்வி படமாகவும் அப்படம் அமைந்துவிட்டது.
பெப்ஸி விளம்பரத்தில் சமந்தா: இந்நிலையில் சமந்தா நாளை தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி பெப்ஸி நிறுவனம் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதாவது பெப்ஸி நிறுவனத்தின் விளம்பரத்தில் சமந்தா நடித்திருக்கிறார்.
பல்வேறு கெட்டப்புகளில் தோன்றும் சமந்தா விளம்பரத்தில் படு ஸ்டைலிஷாக இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து அதனை ட்ரெண்டாக்கி வருகின்றனர். மேலும், #PepsiRiseUpBabyXSamantha என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது.

அடுத்த வெப் சீரிஸில் சமந்தா: சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் குஷி படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதேபோல் சிட்டாடல் என்ற வெப் சீரிஸ் இந்தியாவில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது. ஹாலிவுட்டில் ப்ரியங்கா சோப்ரா நடித்த கதாபாத்திரத்தில் இந்தியாவில் உருவாகும் சிட்டாடலில் சமந்தா நடிக்கவிருக்கிறார். அதனை ஃபேமிலி மேன் வெப் சீரிஸை இயக்கிய ராஜ்&டிகே இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.