சென்னை: ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், வில்லன் போன்ற திரைப்படங்கள் அஜித்தின் ஆரம்ப காலத்தில் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுக்கொடுத்தன.
இந்தப் படங்கள் உட்பட மொத்தம் 9 படங்களை அஜித்துக்காக தயாரித்தவர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி.
அஜித் – நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி கூட்டணி என்றாலே ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படும்.
இந்நிலையில், தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி கேன்சர் பாதிப்பால் உயிரிழந்தார்.
தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி மறைவு
அஜித்தின் ஆரம்ப காலத்தில் அவருக்கு மிகப் பெரிய சப்போர்ட்டாக இருந்தவர் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ் சக்கரவர்த்தி. நிக் ஆர்ட்ஸ் பேனரில் எஸ்.எஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில் மட்டும் மொத்தம் 9 படங்களில் நடித்துள்ளார் அஜித். ராசி படத்தில் இணைந்த இந்தக் கூட்டணி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜீ, வரலாறு படங்கள் வரை தொடர்ந்தது.
அஜித்தின் ஃபேவரைட் தயாரிப்பாளர்களில் ஒருவராக வலம் வந்த எஸ்.எஸ் சக்கரவர்த்தி கடந்த சில தினங்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் சிகிச்சை எடுத்து வந்த அவர் தற்போது உயிரிழந்தார். தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக அஜித்துக்கு இது மிகப் பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.
1990களில் அஜித் முன்னணி நடிகராக வளர்ந்து வந்த காலக்கட்டத்தில் அவருக்கு பக்கபலமாக நின்றவர் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி. அப்போதெல்லாம் அஜித் பட அறிவிப்பு என்றாலே, அது நிக் ஆர்ட்ஸ் பேனர் தான் என ரசிகர்களே முடிவு செய்துவிடுவார்கள். தொடர்ச்சியாக அஜித் – நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி கூட்டணியில் படங்கள் வெளியாகிக் கொண்டே இருந்தன.
அஜித் படங்கள் தவிர விக்ரம் நடித்த காதல் சடுகுடு, சிம்புவின் காளை, வாலு படங்களையும் தயாரித்துள்ளார் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. வாலு படத்திற்குப் பின்னர் தயாரிப்பில் ஆர்வம் காட்டாத நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி, நடிப்பில் களமிறங்கினார். கடந்தாண்டு விமல் நடிப்பில் வெளியான விலங்கு வெப் சீரிஸில் போலீஸாக நடித்திருந்தார் எஸ்.எஸ் சக்கரவர்த்தி.
அதன்பின்னர் கேன்சாரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்ததாக சொல்லப்படுகிறாது. சில தினங்களாக கேன்சரால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். தயாரிப்பாளார் எஸ்.எஸ் சக்கரவத்தி உயிரிழந்தது திரையுலகில் மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜித் கேரியரில் அவரது 9 படங்களை தயாரித்துள்ளது நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தான் தனது தந்தையை இழந்து சோகமாக காணப்பட்டார் அஜித். இதனைத் தொடர்ந்து அவருக்கு மிகவும் நெருக்கமான தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாள் என்ற நிலையில், தயாரிப்பாளர் எஸ்.எஸ் சக்கரவர்த்தியின் மறைவு ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.