‘சிறுபான்மையினரை அரவணைத்துச் செல்ல வேண்டும். அவர்களுக்கு எதிராக செயல்படுவதை பாஜகவினர் முற்றிலுமாக கைவிட வேண்டும்’ என ஹைதராபாத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி அண்மையில் பேசியிருந்தார்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், உத்தரபிரதேச மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் இதுவரை முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத பாஜக, வரும் மே 4, 11 தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கும் உ.பி. உள்ளாட்சி தேர்தலில் மற்ற, மாநிலங்களை விட அதிக அளவு முஸ்லீம்களை வேட்பாளராக அறிவித்துள்ளது.
அதாவது, முதல்கட்ட தேர்தலில் 200 முஸ்லீம்களும், இரண்டாம் கட்ட தேர்தலில் 167 முஸ்லிம்களுக்கு பாஜக வாய்ப்பு கொடுத்திருக்கிறது. பாஜக வரலாற்றில் இவ்வாறு அதிக முஸ்லீம்களுக்கு இதுவரை வாய்ப்பளிக்கப்பட்டதில்லை.
இந்த 367-ல் பாதி வேட்பாளர்கள் வென்றாலும் முஸ்லிம்கள் இடையே தமது செல்வாக்கு உயரும் என பாஜக கருதுகிறது. இது அடுத்தடுத்த தேர்தல்களில் பலனளிக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஏனெனில் உ.பி.யில் பல தொகுதிகளில் முஸ்லிம்களால் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது.
கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களில் கிடைத்த ஆதரவு, 2024 தேர்தலில் குறையும் என பாஜக அஞ்சுவதால், இந்த இழப்பை சரிக்கட்ட, முஸ்லீம்களின் ஆதரவைப் பெற திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.