சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைமை ஆலயமாக விளங்குகிறது. சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே லிங்கத்தில் காட்சி அளிக்கும் இந்தத் திருத்தலத்தில் வழிபட்டு இந்திரன் சாபத்தில் இருந்து விடுபட்ட புராணம் உள்ளது. இந்தக் கோயிலில் மார்கழி திருவிழா மற்றும் சித்திரை தெப்பத் திருவிழா ஆகியவை விமர்சையாகக் கொண்டாடப்படும். சித்திரை தெப்பத் திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாள்களில் தினமும் கலை நிகழ்ச்சிகள், வாகன பவனி, சிறப்பு சமய சொற்பொழிவுகள் நடைபெற்றன. ஐந்தாம் நாள் திருவிழாவில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி பவனியும், ஏழாம் நாள் திருவிழாவன்று கைலாச பர்வத வாகன எழுந்தருளலும் நடைபெற்றது. ஒன்பதாம் நாள் விழாவான இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
காலை எட்டு மணிக்குத் தேர் வடம் பிடிக்கப்பட்டது. முதலில் விநாயகர் தேரை சிறுவர் சிறுமியர் இழுத்துச் சென்றனர். அம்மன் தேரில் தாணுமாலைய சுவாமி எழுந்தருளினார். சுவாமி எழுந்தருளிய தேரை ஆண்களும் அம்மன் எழுந்தருளிய தேவேந்திரன் தேரைப் பெண் பக்தர்களும் நான்கு ரத வீதிகள் வழியாக வடம் பிடித்து இழுத்து வந்தனர்.
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் எம்.பி ஹெலன் டேவிட்சன், சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசுயா உட்படப் பலர் தேர் வடம்பிடித்து இழுத்தனர். ‘ஓம் நமசிவாயா’ என்ற கோஷத்துடன் சுவாமி தேரும், ‘ஓம் சக்தி… பராசக்தி’ கோஷத்துடன் அம்மன் தேரும் நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்தன. நேற்று இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி பவனி நடைபெற்றது.
பத்தாம் நாள் விழாவான நாளை (ஏப்.30) இரவு 8 மணிக்குத் தெப்பக்குளத்தில் உள்ள தெப்பத்தில் சிவபெருமான், பெருமாள், அம்மன் ஆகியோர் எழுந்தருளுகின்றனர். தொடர்ந்து தெப்ப மண்டபத்தைச் சுற்றி மூன்று முறை தெப்பம் வலம் வரும். முதல் சுற்றை காக்கமூர் இளைஞர்களும், இரண்டாம் சுற்றை சுசீந்திரம் மேலத்தெரு இளைஞர்களும், மூன்றாம் சுற்றை சுசீந்திரம் கீழத்தெரு இளைஞர்கள் என மூன்று முறை தெப்பத்தை இழுத்து வலம் வர செய்கின்றனர். மூன்றாவது சுற்று இறுதியில் வாண வேடிக்கையும், சுவாமிக்கு தீபாராதனையும் நடைபெறும். இதைத் தொடர்ந்து தெப்பகுளத்தில் சுவாமிக்கு ஆராட்டு நடைபெறும். தெப்பத் திருவிழாவை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பக்குளத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீபங்கள் ஏற்றப்படுகின்றன. தெப்பக்குளத்தைச் சுற்றி நின்று பக்தர்கள் எளிதில் காணும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.