ஆர்.கே.சுரேஷூக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்!!

ஆருத்ரா மோசடி வழக்கில் நடிகரும், பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதிக வட்டி தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்து பொதுமக்களிடம் பல கோடி மோசடி செய்ததாக ஆருத்ரா நிதி நிறுவனத்தின் மீது புகார் எழுந்தது.

இதைத் தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் ஆருத்ரா நிதி நிறுவனம் 98,000 பேரிடம் இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி விவகாரத்தில் பல முக்கிய புள்ளிகளிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பாஜக முன்னாள் நிர்வாகியும் ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநருமான ஹரிஷை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திவருகிறது.

விசாரணையில் ஹரிஷ் பாஜகவில் பொறுப்பு வாங்க மோசடி செய்த பணத்தை பயன்படுத்தியதும், பணத்தை பாஜகவில் சிலருக்கு வழங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. பாஜக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த அலெக்ஸ் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி சுதாகர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும், பா.ஜ.க நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நடத்த பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டனர். அதன்படி, ஆர்.கே.சுரேஷுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது.

விசாரணைக்கு ஆஜராகாமல் சம்மனை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஆர்.கே.சுரேஷூக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று பொருளாதாரக் குற்றப் பிரிவு ஐ.ஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.