புதுடெல்லி: சூடானில் இருந்து மீட்கப்பட்ட மேலும் 231 இந்தியர்கள் இன்று நாடு திரும்பினர். இதுவரை 2,100-க்கும் மேற்பட்டோர் நாடு திரும்பி உள்ளனர்.
சூடானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் ராணுவத் தளபதி அப்தல் ஃபதா அல் புர்ஹான் தரப்பும், துணை ராணுவப் படையாக ஆர்எஸ்எஃப் பிரிவும் (ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸ்) கடும் மோதலில் ஈடுபட்டுள்ளன. அங்கு 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதற்காக, கப்பல்களையும் விமானங்களையும் மத்திய அரசு சூடானுக்கு அனுப்பி உள்ளது. சூடானின் துறைமுக நகரான போர்ட் சூடானில் இருந்து சவூதி அரேபியாவின் துறைமுக நகரான ஜெட்டாவுக்கு இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு பின்னர் அங்கிருந்து அவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
அவ்வாறு 231 இந்தியர்கள் இன்று (சனிக்கிழமை) புதுடெல்லி வந்தனர். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சூடானில் இருந்து மீட்கப்பட்டு டெல்லி விமான நிலையம் வந்த இந்தியர்கள், பாரத் மாதா கி ஜெய் என்றும் வந்தே மாதரம் என்றும் கோஷங்களை எழுப்பினர். சாவின் விளம்பில் இருந்து தாங்கள் மீண்டிருப்பதாகவும், இது தங்களுக்கு மறு பிறவி என்றும் அவர்கள் உணர்ச்சி ததும்ப தெரிவித்தனர். “சூடானில் தற்போது நடந்துகொண்டிருக்கும் சண்டைக்கு மத்தியில் அங்கு இருப்பது மிகவும் கடினம். போதுமான உணவு கிடைக்காமல், குடிநீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டோம்.
தொடர்ந்து குண்டுமழை பெய்த வண்ணம் இருந்தது. ராக்கெட் தாக்குதல்களும் இருந்தன. நாங்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. உணவகமும் குண்டுவெடிப்பால் தகர்க்கப்பட்டது. அங்கிருந்து வெளியேறுவதும் கடினமாக இருந்தது. வெளியே பயணிப்பது பாதுகாப்பானதாக இருக்காது. ஏனெனில், பேருந்துகள் மீதும் குண்டுகள் வெடிக்கும்” என சூடானில் இருந்து மீண்டு வந்த பிஹாரைச் சேர்ந்த எடக்ட்ரீஷியன் ஒருவர் தெரிவித்தார்.
“இது எங்களுக்கு மறுபிறவி. போர்ட் சூடான் நகரில் இந்திய ராணுவத்தைப் பார்த்த பிறகுதான், பத்திரமாக நாடு திரும்ப முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. போர்ட் சூடானில் இருந்து இந்திய ராணுவம் எங்களை பத்திரமாக ஜெட்டாவுக்கு அழைத்து வந்தது. அங்கிருந்து விமானம் மூலம் நாங்கள் புதுடெல்லி அழைத்து வரப்பட்டோம். எங்களுக்குத் தேவையான அனைத்தையும் அதிகாரிகள் பார்த்துக்கொண்டார்கள். ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்!” என அவர் தெரிவித்தார்.
சூடானில் இருந்து மீண்டு வந்த மற்றொரு இந்தியரான முகம்மது இக்பால் ஹூசைன், “நான் சூடானில் கடந்த 15 ஆண்டுகளாக இருந்து வந்தேன். இதுபோன்று இதற்கு முன் நடந்ததில்லை. நாங்கள் அச்சத்தோடு இருந்தோம். எனது வீடும் ராக்கெட் மூலம் தாக்கப்பட்டது. எங்களை பத்திரமாக மீட்குமாறு இந்திய தூதரகத்திடம் வேண்டுகோள் விடுத்தோம். அவர்கள் எங்களுக்கு உதவினார்கள். எங்களைப் பத்திரமாக போர்ட் சூடான் நகருக்கு அழைத்து வந்தார்கள். அதன்பிறகு இந்திய கடற்படை எங்களை பத்திரமாகப் பார்த்துக்கொண்டார்கள். ஜெட்டா வந்த பிறகுதான் சுத்தமான காற்றை சுவாசித்தோம். சரியான நேரத்தில் எங்களுக்கு உதவிய, எங்களை மீட்ட இந்திய அரசுக்கு மிக்க நன்றி” என தெரிவித்தார்.
உக்ரைனில் சிக்கித் தவித்த இந்தியர்களை அங்கிருந்து மீட்பதற்காக கடந்த ஆண்டு மத்திய அரசு ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் திட்டத்தை செயல்படுத்தியது. தற்போது, சூடானில் இருந்து இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்கான திட்டத்திற்கு ஆபரேஷன் காவேரி என பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை சூடானில் இருந்து 2,100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.