இந்திய வரலாற்றில் முதன்முறையாக எல்லையில் பெண் ராணுவ அதிகாரிகள்: சென்னை ஓடிஏ-வில் பயிற்சி நிறைவு

சென்னை: இந்திய வரலாற்றில் முதன்முறையாக எல்லைப் பகுதியில் பணியாற்றப் போகும் பெண் ராணுவ அதிகாரிகள், சென்னை பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் மையத்தில் பயிற்சி முடித்து லெப்டினன்டாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

சென்னை பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் உள்ளது. முப்படைகளிலும் பணியில் சேரும் அதிகாரிகளுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், நட்பு நாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. நாட்டிலேயே இங்கு மட்டும்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்படி, பயிற்சி பெற்ற அதிகாரிகள் நிறைவு அணிவகுப்பு இன்று நடைபெற்றது. 11 மாத பயிற்சியினை நிறைவு செய்த 186 அதிகாரிகள் லெப்டினன்டாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

இந்தியாவை சேர்ந்த 121 ஆண் அதிகாரிகள், 36 பெண் அதிகாரிகள், நட்பு நாடுகளைச் சேர்ந்த 5 ஆண் அதிகாரிகள் மற்றும் 24 பெண் அதிகாரிகளின் பயிற்சியை நிறைவு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் வங்கதேச ராணுவத்தின் தலைமை தளபதி ஷஃப்யூதின் அமீது சிறப்பு விருந்தினராக பங்கேற்று புதிதாக பதவி ஏற்ற அதிகாரிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

குறிப்பாக, இந்த ஆண்டு முதன்முறையாக 5 பெண் ராணுவ அதிகாரிகள், இந்திய எல்லைப் பகுதிகளில் பணியாற்ற உள்ளனர். இவர்கள் அனைவரும் Regiment of Artillery பிரிவில் பணியாற்ற உள்ளனர். இதுவரை பெண்கள் இந்திய எல்லைப் பகுதியில் பணியாற்றியது இல்லை. முதல் முறையாக இந்த 5 பேர் ராணுவத்தின் பல்வேறு துறைகளின் கீழ் பணியாற்ற உள்ளனர்.

சிறப்பாக பயிற்சியை முடிந்த அஜய் சிங் கில் என்ற அதிகாரிக்கு தங்கப் பதக்கமும், அஜய்குமார் என்ற அதிகாரிக்கு வெள்ளிப் பதக்கமும், மெஹக் ஷைனி என்ற அதிகாரிக்கு வெண்கலப் பதக்கமும் வழங்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.