கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி, பிதார் மாவட்டத்தில் உள்ள ஹம்னாபாத், விஜயபுரா, குடாச்சி மற்றும் பெங்களூரு வடக்கு ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “காங்கிரஸ் என்னை அவமரியாதை செய்கிறது. காங்கிரஸ் இதுவரை என்னை 91 முறை இழிவுப்படுத்தி உள்ளது. காங்கிரஸ் ஒவ்வொரு முறை என்னை இழிவுப்படுத்தும் போதும் அது தகர்க்கப்படுகிறது. காங்கிரஸ் எத்தனை முறை இழிவுப்படுத்தினாலும் கர்நாடக மக்களுக்காக நான் பாடுபடுவேன். காங்கிரஸ் அவதூறாக பேசும்போது அதை நான் பரிசாகவே ஏற்றுக்கொள்கிறேன்.
மீண்டும் பாஜக ஆட்சியை ஏற்க கர்நாடக மக்கள் தயாராக உள்ளனர். கர்நாடக மக்கள், விவசாயிகளுக்கு காங்கிரஸ் பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே அளித்துள்ளது. என்னை விஷப்பாம்பு என விமர்சித்த காங்கிரஸுக்கு மக்கள் வாக்குகள் மூலம் பதிலடி தருவர். ஏழை மக்களின் வலி, போராட்டங்களை காங்கிரஸ் எப்போதும் புரிந்துகொள்ளாத என கூறினார்.