பெங்களூரு: கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியும் முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகளுமான கீதா நேற்று பெங்களூருவில் காங்கிரஸில் இணைந்தார்.
கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கன்னட நடிகர்கள் சுதீப், தர்ஷன் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மதச்சார்பற்ற ஜனதா தளத்திக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நடிகர் நிகில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதேபோல நடிகையும் முன்னாள் எம்.பி.,யுமான ரம்யா காங்கிரஸூக்காக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் கன்னட உச்ச நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியும் முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகளுமான கீதா நேற்று பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையில் அக்கட்சியில் இணைந்தார். அப்போது கீதாவின் சகோதரரும் சரோபா தொகுதி எம்எல்ஏவுமான மது பங்காரப்பா உடனிருந்தார்.
பின்னர் கீதா பேசுகையில்,”கடந்த மக்களவைத் தேர்தலின்போதே காங்கிரஸில் இணைய நினைத்திருந்தேன். தற்போது கட்சியில் இணைந்திருக்கிறேன். காங்கிரஸின் வெற்றிக்காக பாடுபடுவேன். நானும் எனது கணவரும் சனிக்கிழமை முதல் என் சகோதரர் மது பங்காரப்பாவை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இருக்கிறோம்” என்றார்.
சகோதரர்களுக்கு இடையே மோதல்: சரோபா தொகுதியில் பாஜக சார்பில் கீதாவின் மற்றொரு சகோதரர் குமார் பங்காரப்பா போட்டியிடுகிறார். அவரது தம்பி காங்கிரஸின் சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இவரை ஆதரித்து கீதாவும்,சிவராஜ்குமாரும் பிரச்சாரம் செய்ய இருக்கின்றனர். முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் சொத்துக்களை பிரிப்பதில் சகோதர சகோதிரிகளுக்கு இடையே மோதல் இருப்பது குறிப்பிடத்தக்கது.