பாட்னா: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடக்கும் என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தற்போது கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருப்பதால், எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் அதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே, தேர்தல் முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறும். வருகிற நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக அதில் ஆலோசிக்கப்படும்.
ஜெயபிரகாஷ் நாராயண் இயக்கம் பிஹாரில் தொடங்கியதை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை பிஹாரில் தொடங்குமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டார். எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் இதற்கு சம்மதித்தால், பிஹாரில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்துவதற்கு நாங்கள் தயார். அதற்கான ஏற்பாட்டை நாங்கள் மகிழ்ச்சியுடன் மேற்கொள்வோம்.
பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் தொடர்ந்து முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம். சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரை நான் சந்தித்துப் பேசி இருக்கிறேன். பாஜக தவிர்த்த கட்சிகளுடன் பேச திட்டமிட்டிருக்கிறேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்பதுதான் எனது முக்கிய நோக்கம்” என்று அவர் தெரிவித்தார்.