கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: இறுதிகட்டத்தை நெருங்கியது – அமைச்சர் ஆய்வு!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் இட நெருக்கடி, போக்குவரத்து நெருக்கடியை போக்கும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் இறுதிக்கட்ட பணிகள் குறித்து சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

திருக்கோவில்களில் பக்தர்களின் வசதிக்காக புதிய ஏற்பாடு – சேகர்பாபு துவக்கி வைத்தார்

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையம் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது.

சென்னை கோயம்பேடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு தெற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையம் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ஜுன் மாதம் பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட தயாராக உள்ளது.

இம்முனையத்தில் புறநகர் பேருந்துகளுக்காக 28.25 ஏக்கர் பரப்பளவில் 226 புறநகர் பேருந்துகள் (அரசு பேருந்துகள்-164, ஆம்னி பேருந்துகள்-62) நிறுத்துவதற்க்காக 8 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையத்தில் புறநகர் பேருந்துகளுக்காக தனி பணிமனை உள்ளது. இப்பேருந்து இம்முனையத்தில் மாநகர பேருந்துகளுக்காக 7.40 ஏக்கர் பரப்பளவில் 11 நடைமேடைகளுடன் மாநகரப் பேருந்துகள் வந்து செல்வதற்கு வசதிகள் 60 அமைக்கப்பட்டுள்ளது.

தனி அலுவலக கட்டிடம், பாதுகாகப்பட்ட குடிநீர் வசதி, 2 மின் தூக்கிகள், 2 நகரும் படிக்கட்டுகள். கழிவறைகள், மாகர பேருந்துகளுக்காக தனி பணிமனை போன்ற வசதிகள் உள்ளது.

இம்முனையத்தில் 2 அடித்தளம், தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் நவீன வசதிகளுடன் கூடிய பிரதான கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அடித்தளத்தில் 2,769 இருசக்கர வாகனங்கள், 324 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த இட வசதி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், தரைத்தளத்தில் 53 கடைகள், 2 உணவகங்கள், 2 துரித உணவகங்கள். அவசர சிகிச்சை மையம், மருந்தகம் பொருள் பாதுகாப்பு அறை, தாய்ப்பாலூட்டும் அறை, பயணச்சீட்டு வழங்கும் இடம், பணம் எடுக்கும் இயந்திரம், நேரக்காப்பாளர் அறை, கண்காணிப்பு கேமரா அறை, பொது கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

6 பயணிகள் மின் தூக்கிகள், 2 சர்வீஸ் மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் போன்ற நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முதல் தளத்தில் 46 கடைகள், 1 உணவகம், 4 பணியாளர் ஓய்வறைகள், ஆண், பெண் பயணிகளுக்காக தனி ஓய்வறைகள் மற்றும் கழிவறைகள் அமைப்பட்டுள்ளது.

மேலும் 144 பணியில்லா பேருந்துகள் நிறுத்த தனி இடம் மற்றும் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் எரிபொருள் நிரப்புவதற்கு இரண்டு எரிபொருள் நிரப்பும் நிலையம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மழைநீர் கால்வாய், மழைநீர் சேகரிப்பு தொட்டி, கழிவு நீரேற்று நிலையம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், துணைமின் நிலையம், டீசல் ஜெனரேட்டர் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் இரவு நேர பயன்பாட்டிற்க்காக அனைத்து சாலைகளிலும் தெருவிளக்குகள் மற்றும் உயர் கோபுர மின் விளக்குகளும் பொறுத்தப்பட்டுள்ளது. புல் தரையுடன் கூடிய பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து இம்முனையம் 95% பணிகள் நிறைவு பெற்றுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சென்னைப் பெருநகர வளர்ச்சி‌க் குழுமத்தின் உறுப்பினர் செயலர்அன்சூல் மிஸ்ரா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ராகுல் நாத், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.