விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அருகே அம்பாசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் மருத்துவர் கலாதேவி (26). இவர், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் தெருவில் உள்ள தனியார் கிளினிக்கில் கடந்த 8 மாதங்களாக மருத்துவராக பணி புரிந்து வந்தார். மேலும் அந்த கிளினிக் எதிர்ப்புறம் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தின் மாடியில் வாடகைக்கு தனி அறை ஒன்றை எடுத்து அங்கு வசித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று பிற்பகல் அவர் கிளினிக்கில் நோயாளிகளை பார்த்து கொண்டிருந்த நிலையில் திடீரென தனது அறைக்கு சென்று விட்டு வருவதாக அங்கு இருந்த நர்சுகளிடம் கூறிவிட்டு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வராதது கண்ட நர்சுகள் கிளினிக்கின் எதிர்புறம் மாடியில் உள்ள அவரது அறைக்கு சென்று பார்த்தனர்.
அப்போது, அங்கு இருந்த மின்விசிறியில் சேலையால் கலாதேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கவரப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி நேரில் சென்று விசாரணை நடத்தினார். சம்பவ இடத்தில் இருந்து போலீசார் டாக்டர் கலாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தற்கொலை செய்து கொண்ட மருத்துவர் கலாதேவியின் செல்போனை பறிமுதல் செய்து போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர். பெண் மருத்துவரின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியாத நிலையில் கவரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.