குரோம்பேட்டையில் பரபரப்பு – மாற்றுத் திறனாளியை வெளியில் தள்ளி டீக்கடையை அகற்ற முயன்ற அதிகாரிகள்..!
சென்னையில் உள்ள குரோம்பேட்டை பகுதியில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக கணேசன் என்ற மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் டீக்கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இந்த டீக்கடை ஜிஎஸ்டி சாலையிலிருந்து மாநகராட்சி மண்டல அலுவலகம் செல்லும் வழியில் உள்ளது.
இந்த நிலையில், இந்த டீக்கடையை இன்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்ற முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதனால், மனவேதனை அடைந்த கணேசன் நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளதால் கடையை அகற்றக்கூடாது என்றுத் தெரிவித்துள்ளார்.
இதனால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அனைவரும் ஒன்றுத் திரண்டு கணேசனுக்கு ஆதரவாக பேசியதால், அதிகாரிகள் கடையை அகற்றாமல் கணேசனுக்கு கால அவகாசம் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து கணேசன் தெரிவித்ததாவது:- கால் இல்லாத மனுஷன் நான். என்னைத் தூக்கி வெளியில போட்டுட்டு கடைய எடுக்க பாக்குறாங்க. முறையா அனுமதி வாங்கி தான் கடைய நடத்துறேன் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.