கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா, இவரது மனைவி கவிதா (33). கவிதா, கடந்த 2016 ம் ஆண்டு பேருந்தில் பயணித்த சக பயணிடம் 10 பவுன் தங்க நகை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார். இதனால் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக கவிதா; தனது இரு குழந்தைகளையும், கணவரையும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இதனிடையே இவ்வழக்கு தொடர்பான வாய்தாவிற்காக கோவை நீதிமன்றத்திற்கு கவிதா வந்திருந்தார். அப்போது நீதிமன்றத்துக்கு கவிதாவின் கணவர் சிவாவும் சென்றுள்ளார். இருவருக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சிவா, பிளாஸ்டிக் பாட்டிலில் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து கவிதா மீது ஊற்றினார். இதில் வலிதாங்க கவிதா கதறி துடித்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் கவிதாவை மீட்டு அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி கவிதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச்சுழலில் சிவா மீது போடப்பட்டிருந்த கொலை முயற்சி வழக்கு, தற்போது கொலை வழக்காக பதியப்பட்டுள்ளது. தற்போது அவர் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.