ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் 10 போலீஸார் உயிரிழந்த சம்பவத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கண்ணிவெடி தாக்குதல் நடத்தியவிதம் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட ஆயுதபோலீஸ் படை (டிஆர்ஜி) உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தப் படையில் உள்ளூர் இளைஞர்கள், மனம் திருந்திய மாவோயிஸ்ட்கள் மற்றும் போலீஸார் இடம்பெற்றுள்ளனர். டிஆர்ஜி படையில் முன்னாள் மாவோயிஸ்ட்கள் இருப்பதால் தீவிரவாதிகளின் இருப்பிடம், பதுங்குமிடம் மிக எளிதாக கண்டுபிடிக்கப்படுகிறது.
இந்த காரணத்தால் டிஆர்ஜி படை வீரர்களை, மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் முதல் எதிரியாக கருதுகின்றனர். அவர்களை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த வரிசையில் கடந்த 26-ம் தேதி சத்தீஸ்கரின் தந்தேவாடா மாவட்டம், அரண்பூர் பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 10 டிஆர்ஜி வீரர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். முதல் கட்ட விசாரணையில், கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்ட விதம் குறித்து அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன. இதுகுறித்து சத்தீஸ்கர் போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:
சத்தீஸ்கரின் தந்தேவாடா பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாத தலைவர் ஜெகதீஷ் தலைமையில் சுமார் 35 தீவிரவாதிகள் வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன்படி கடந்த 25-ம் தேதி டிஆர்ஜி படையை சேர்ந்த சுமார் 300 வீரர்கள் ககாடி, நகாரி, கொண்டேரஸ், அரண்பூர் வனப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அரண்பூர் பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை சுற்றி வளைத்தோம். ஆனால்அங்கிருந்து அவர்கள் தப்பியோடி விட்டனர்.
இதன்பிறகு டிஆர்ஜி வீரர்களின் நடமாட்டத்தை உன்னிப்பாகக் கண் காணித்த மாவோயிஸ்ட்கள், அரண்பூர்-சமேலி சாலையில் சுரங்கம் தோண்டி சுமார் 50 கிலோ வெடிபொருட்கள் அடங்கிய கண்ணிவெடியை புதைத்துவைத்துள்ளனர். சாலை தோண்டப்பட்டதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் மணல் முழுவதையும் அங்கிருந்து முழுமையாக அப்புறப்படுத்தி உள்ளனர்.
கண்ணிவெடி புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து 80 மீட்டர் தொலைவுக்கு வயர் மூலம் இணைப்பு கொடுத்துள்ளனர். டிஆர்ஜி வீரர்களின் வாகனம் சாலையைக் கடந்தபோது 80 மீட்டர் தொலைவில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் கண்ணிவெடியை, மாவோயிஸ்ட்கள் வெடிக்கச் செய்துள்ளனர். இதில் 10 டிஆர்ஜி வீரர்களும், வாகன ஓட்டுநரும் உயிரிழந்தனர்.
கண்ணிவெடியில் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் பயன்படுத் தப்பட்டு உள்ளது. அருகில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் இருந்து இந்த வெடிபொருளை மாவோயிஸ்ட்கள் திருடி தாக்குதலுக்கு பயன்படுத்தி உள்ளனர். 10 வீரர்களின் உயிரிழப்புக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். தந்தேவாடா வனப்பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
எவ்வித பாதுகாப்பும் இல்லாத தனியார் வாகனங்களில் டிஆர்ஜி வீரர்கள் அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர்.பாதுகாப்பு குளறுபடியே இதற்கு காரணம் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.