மதிமுக-வை திமுகவுடன் இணைத்துவிடலாம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு, அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியிருக்கிறார். அதில் பல்வேறு அதிருப்திகரமான விமர்சனங்ளை முன்வைத்திருக்கிறார். குறிப்பாக மதிமுகவை, திமுகவுடன் இணைத்து விடுங்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், “ மதிமுக துவக்கப்பட்ட காலத்தில், தங்களின் வாரிசு அரசியலுக்கு எதிரான உணர்ச்சிப்பூர்வமான பேச்சைக் கேட்டே, லட்சக்கணக்கான தோழர்கள், தொண்டர்கள் கட்சியில் இணைந்தனர். ஆனால் தங்களின் குழப்ப அரசியல் நிலைப்பாடு காரணமாக, தங்களை ஆதரித்த பெருவாரியான முன்னணித் தலைவர்களும், தோழர்களும் கழகத்தை விட்டு படிப்படியாக வெளியேறி திமுகவிற்கே சென்று விட்டனர்.
தங்களின் அண்மைகால நடவடிக்கைகளால் மதிமுகவிற்கும், தங்களுக்கும் தமிழக மக்கள் மத்தியில் அவப்பெயரும், சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு தாங்களும் அப்பாற்பட்டவர் இல்லை என்பதனை மக்கள் அறிந்து விட்டனர். தமிழ்நாடு முழுவதும் பழைய உறுப்பினர்கள் கூட, தங்களை புதுப்பித்துக் கொள்ள முன்வரவில்லை. புதிய உறுப்பினர்களை சேர்ப்பதில், நிர்வாகிகளிடம் தொய்வு ஏற்பட்டு, ஆர்வம் குறைந்திருக்கிறது.
கிளை உறுப்பினர்கள் 25 பேர் இருக்க வேண்டும் என்ற விதியை, தாங்கள் 10 உறுப்பினர்கள் இருந்தால் போதும் என மாற்றியிருப்பது, கட்சியின் வளர்ச்சியை காட்டுகிறதா அல்லது வீழ்ச்சியை காட்டுகிறதா? மதிமுகவின் நிலைமை எப்படி உள்ளது என்பதை, தங்களின் முடிவிற்கு விட்டு விடுகிறேன்.
தாங்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக கொங்கு மண்டலம் மதிமுகவின் ஜிப்ரால்டர் கோட்டை என்று பேசிவருகிறீர்கள். ஆனால் கொங்கு மண்டலத்தில் உள்ள மூன்று மாநகராட்சிகளிலும், கழகத்தின் மாநகர மாவட்டச் செயலாளர்கள் தேர்தல்களை நடத்தி முடித்து விட்டீர்கள் என்று சொல்லப்படுகிறது.
கழகத்தின் சட்டவிதி 13 பிரிவு 4-ல் ஒவ்வொரு வட்ட கிளையும் 100 பேருக்கு குறையாத உறுப்பினர்களை கொண்டதாக அமையும் என்று இருக்கிறது. திருப்பூர், ஈரோடு மாநகராட்சி வார்டுகளிலும் போலியான பெயர்களில் உறுப்பினர்களாக பதிவுசெய்து கொண்டு, தேர்தல்களை நடத்தி முடித்திருக்கிறீர்கள். கொங்கு மண்டலத்திலேயே மதிமுகவின் நிலை இதுவென்றால் வேறு மாவட்டங்களை பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
உங்களிடம் நேர்மையும், உண்மையும் இருக்குமானால் ஒவ்வொரு வார்டுகளிலும் உறுப்பினர்களாக புதுப்பித்து கொண்டவர்களையும், புதியதாக சேர்க்கப்பட்டவர்களின் பெயரையும், ஆதார் எண்ணையும் இணைத்து சங்கொலியில் வெளியிட கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மதிமுகவில் நடைபெறும் சம்பவங்களால் வெட்கப்படவும், வேதனைப்படவும் வேண்டியிருக்கிறது. இன்று கழகத்தின் கள நிலவர செல்வாக்கு முற்றிலும் சரிந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமை மதிமுக-விற்கு எத்தனை தொகுதி ஒதுக்குவார்கள் என்று தெரியாத நிலை இருக்கிறது. இந்த நிலையில், விருதுநகர் மாவட்ட கழகம் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் ஒருவர் பெயரை குறிப்பிட்டு போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி பத்திரிகைக்கு செய்தி வெளியிடுவதும், அவருக்கே திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என திருச்சி மாவட்ட கழக தோழர்களிடம் சொல்லி தீர்மானம் நிறைவேற்றி பத்திரிகை செய்தி வெளியிடுவதும், மீண்டும் அவருக்கே திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட கழகம் தீர்மானம் நிறைவேற்றி பத்திரிகைகளில் செய்தி வெளியிடுவதும் தான் அரசியல் நேர்மையா?
அன்று திமுகவில் தங்களுக்கு ஒரு இடர்பாடு வந்த போது, எந்த குடும்ப அரசியலுக்கு எதிராக தொண்டர்களை தூண்டினீர்களோ அன்று ஒரு நிலைப்பாடும், இன்று அதற்கு நேர் எதிர்மாறாக தங்களின் குடும்பத்தினருக்கு தன்னிச்சையாக கழகத்தில் பொறுப்பு வழங்க முயற்சிக்கும் போது தொண்டர்கள் மத்தியில் தாங்கள் முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாடு எடுப்பதும், மகனை ஆதரித்து, அரவணைப்பதும் தங்களின் சந்தர்பவாத அரசியலையும் பொது வெளியில் கழகத்தினரின் மீது தமிழக மக்கள் எள்ளி நகையாட வைத்துவிட்டது என்பதை தாங்கள் இன்னமும் உணராமல் இருப்பது வருந்ததக்க வேதனையான நிகழ்வே.
தமிழ்நாட்டில் எனக்கு தெரிந்து எந்த அரசியல் கட்சியும், இப்படி பதவி கேட்டு தீர்மானங்களை நிறைவேற்றியதில்லை. இப்படிப்பட்ட நடவடிக்கைகள் தங்கள் குடும்ப மறுமலர்ச்சிக்கு தான் என்பதை, தங்களின் செயல்பாடு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இதுதான் அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதி என்பதன் விளக்கமா என்பதை தங்களின் மனசாட்சியிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.
தாங்களே கடந்த முப்பது ஆண்டுகளாக உங்கள் உணர்ச்சி மிக்க பேச்சை நம்பி, வாழ்க்கையை இழந்த தோழர்களை மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க கழகத்தை தாய்க் கழகமான திமுகவுடன் இணைத்துவிடுவது சமகால அரசியலுக்கு சாலச் சிறந்தது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கு முன்னதாக பல முறை தான் கடிதம் எழுதியிருப்பதாகவும், அதற்கு நீங்கள் பதில் கூறவில்லை என்றும் காட்டமாக தெரிவித்திருக்கிறார்.