செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் மசூதி பகுதியை சேர்ந்தவர் சர்புதீன், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று கடந்த வாரம் பொது நல வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இன்று கல்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த சர்புதீன் காரை வழி மறித்த, 5 பேர் கொண்ட கும்பல் காரில் வைத்து சர்புதீனை வெட்டி படுகொலை செய்தது.
இந்த சம்பவத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் அகமது பாஷா, பாஷா ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் மூவரை தேடி வருகின்றனர்.
பொதுநல வழக்கு தொடர்ந்த நபரை, ஆக்கிரமிப்பாளர்கள் கொலை செய்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் கண்டன செய்தியில், “தூத்துக்குடியில் மணல் கடத்தலை தட்டிக்கேட்ட விஏஓ வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பதை பதைப்பே இன்னும் அடங்கவில்லை ,
அதற்குள்ளாக திருக்கழுக்குன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்ததற்காக சர்புதின் வெட்டிப் படுகொலை, சேலம் ஓமலூரில் அரசு ஊழியர்- விஏஓ வினோத்குமார் மீது கொலை முயற்சி என அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள்,
தமிழகத்தில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்கிற வேதனைக்கேள்வியை எழுப்புகிறது
கமிஷனிலும் கலெக்ஷனிலும் இருக்கும் ஆர்வத்தை சட்டம் ஒழுங்கை காப்பதில் இந்த முதல்வர் காண்பிக்க தவறுவதை வன்மையாக கண்டிப்பதுடன், ரவுடிகள் அச்சமின்றி நடைபெறும் இந்த காட்டாட்சியில் மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டிய அவலநிலை உள்ளதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.” என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.