கோயம்புத்தூரில் பலூன் விற்கும் வடமாநில பெண்ணை பாட்டிலால் தாக்கி நூற்றி இருபது ரூபாய் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரேகா என்ற அந்தப் பெண் கடந்த 3 ஆண்டுகளாக கோவையில் தங்கி பலூன் விற்று வருகிறார்.
தங்குவதற்கு வீடு இல்லாததால், வடகோவை மேம்பாலம் அருகேயுள்ள பிளைவுட் கடையோரம் நேற்று இரவு படுத்து உறங்கியுள்ளனர்.
அதிகாலை 5 மணியளவில் கையில் மதுபாட்டியிலுடன் வந்த நபர் ஒருவர், ரேகாவின் மேல் சட்டையில் இருந்த பணத்தை எடுக்க முயன்றுள்ளான்.
ரேகா கண் விழித்து அலறியதால் கையில் இருந்த மது பாட்டிலால் அவரின் கழுத்தில் தாக்கி விட்டு அந்நபர் தப்பியோடினான். அங்கிருந்தவர்கள் அவனை துரத்திப்பிடித்து ஆர்.எஸ்.புரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சப்ளையராக வேலை செய்துவரும் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஜெகன்நாதன் என்ற அந்த நபர் மீது ஏற்கனவே கொள்ளை வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.