சென்னை:
சென்னை விமான நிலைய புதிய முனையத்துக்து தனது 2 பிள்ளைகளுடன் படம் பார்க்க வந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திரிசூலத்தை அடுத்த பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (33). இவரது கணவர் பாலாஜி, அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் மகன் 9-ம் வகுப்பும், மகள் 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இந்த சூழலில், நேற்று இரவு தனது 2 பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்துக்கு ஐஸ்வர்யா காரில் வந்தார். பின்னர் அங்குள்ள இரவு உணவை சாப்பிட்டுவிட்டு மல்டிபிளெக்ஸ் திரையரங்கில் அவர்கள் படம் பார்க்க சென்றனர். படம் பார்த்துக் கொண்டிருந்த போதே, தான் பாத்ரூமுக்கு சென்று வருவதாக கூறி தியேட்டரில் இருந்து ஐஸ்வர்யா வெளியேறினார்.
பின்னர், அங்குள்ள பன்னடுக்கு கார் பார்க்கிங்கில் 4-வது தளத்துக்கு சென்ற ஐஸ்வர்யா, அங்கிருந்து கீழே குதித்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து, அங்கிருந்த போலீஸார் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அவரது உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஐஸ்வர்யாவின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று விசாரித்து வருகின்றனர். கணவன் – மனைவி இடையேயான பிரச்சினையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தொடங்கி உள்ளனர். சென்னை விமானய புதிய முனையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் இந்த தற்கொலை நடந்திருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தற்கொலை சம்பவம் நிகழ்ந்த சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம், இம்மாதத் தொடக்கத்தில்தான் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.