சடக் 2 மற்றும் பாட்லா ஹவுஸ் ஆகிய படங்களில் துணை வேடத்தில் நடித்தவர் நடிகை கிரிசான் பெரெய்ரா. இவர் த்ரீ வுமன், டிரம்ரோல், சண்டேஸ் வித் சித்ரா உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். மேலும் திங்கிஸ்தான் வெப் தொடரிலும் நடித்துள்ளார். இவர், தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் போரிவ்லி பகுதியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், கிரிசான் பெரெய்ரா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அரபு அமீரகம் சென்றார். அவர் கொண்டு சென்ற விருது ஒன்றில் போதைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததால், நடிகை கைது செய்யப்பட்டார். சுமார் மூன்று வார காலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் குற்றம் செய்யவில்லை என்பது நிரூபனமானதால் விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து நடிகைக்கு வழங்கப்பட்ட விருதில் போதைப்பொருள் மறைத்து வைத்தது தொடர்பாக மும்பையைச் சேர்ந்த ஆண்டனி பால், ரவி ஆகியோரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கால கட்டத்தில், கழிவறைக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரில் தனக்காக காபி தயாரித்ததாகவும், சலவை பவுடரைக் கொண்டு தனது தலைமுடியை அலசிக் கொண்டதாகவும் நடிகை கூறியுள்ளார். கடந்த 1-ம் தேதியில் இருந்து சிறையில் இருந்த நடிகை கிரிசான் விரைவில் இந்தியா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.