சென்னை: மதுரை கோட்ட ரயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் சுரங்கப்பாதை பணிகள் நடப்பதால் தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாகர்கோவில், திருச்செந்தூர் ரயில்கள் திண்டுக்கல் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும் என்ற அறிவிப்பை ரயில்வே வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், பலரும் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட தொடங்கியுள்ளனர். சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் வேலை நிமித்தமாக தென் மாவட்டங்கள் உள்பட வெளி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.
பண்டிகை நாட்கள், விடுமுறை தினங்கள் உள்ளிட்ட நாட்களில் இந்த மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால், பேருந்து, ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். பொங்கல், தீபாவளி பண்டிகை நாட்களில் எல்லாம் வெளியூர் செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள், ரயில்கள் கூட இயக்கப்படுகின்றன.
கார்கள் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் செல்லும் பயணிகளால் சுங்கச்சாவடிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். பண்டிகை நாட்களை போலவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடப்படும் கோடை விடுமுறை காலங்களில் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கமாக கொண்டுள்ளார்.
சொந்த ஊர்களில் தாத்தா பாட்டியுடன் விளையாட பிள்ளைகளும் ஆசைப்படுவதால் கிராமங்கள், சிற்றூர்களில் இருந்து வந்து சென்னை போன்ற நகரங்களில் செட்டில் ஆன மக்களும் கோடை விடுமுறையின் போது ஊர்களுக்கு செல்வார்கள். இதனால், மே மாதத்தில் வெளியூர் செல்லும் ரயில் , பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.
இந்த நிலையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் சில ரயில்கள் குறிப்பிட்ட நாட்கள் திண்டுக்கல்லுடன் நிறுத்தப்படும் என்ற அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இதனால் விடுமுறை காலங்களில் சொந்த ஊர் செல்லும் மக்கள் இந்த விவரங்களை முன்கூட்டியே அறிந்து சென்றால் சிரமத்தை தவிர்க்கலாம்.
இது குறித்து ரயில்வே வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:-
* மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட கோவில்பட்டி – குமாரபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே கேட்டுகள் அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக அந்த வழியாக இயக்கப்படும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* கோவை – நாகர்கோவில் (வண்டி எண்: 16322) எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 3 மற்றும் 17 ஆம் தேதிகளில் திண்டுக்கல் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.
* நாகர்கோவிலில் இருந்து காலை 7.35 மணிக்கு புறப்படும் நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.16321) மே 3 மற்றும் 17 ஆம் தேதிகளில் மட்டும் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். வண்டி வழக்கமான நேரத்திலேயே இயக்கப்படும்.
* சென்னை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயிலான தாம்பரம்-அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (20691) வரும் 2-ஆம் தேதி மற்றும் 16-ந் தேதிகளில் திருச்சி வரை மட்டும் இயக்கப்படும்.
* மறுமார்க்கத்தில் நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா ரெயில் (20692) வருகிற மே 3-ந் தேதி மற்றும் 17-ந் தேதிகளில் திருச்சியில் இருந்து புறப்பட்டு செல்லும். ரயில் வழக்கமான நேரத்தில் செல்லும்.
* திருச்செந்தூர்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் (16732) வரும் 3-ந் தேதி மற்றும் 17-ந் தேதிகளில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து பாலக்காடு புறப்படும்.
* பாலக்காடு-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16731) வரும் 3-ந் தேதி மற்றும் 17-ந் தேதிகளில் நாட்களில் திண்டுக்கல் ரயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும்.
* திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (22627) வருகிற 3-ஆம் தேதி மற்றும் 17-ஆம் தேதிகளில் விருதுநகர் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.
* மறுமார்க்கத்தில் திருவனந்தபுரம்-திருச்சி இடையேயான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (22628) வருகிற 3-ஆம் தேதி மற்றும் 17-ஆம் தேதிகளில் விருதுநகர் ரயில் நிலையத்தில் இருந்து திருச்சி புறப்பட்டு செல்லும்.
* குருவாயூரில் இருந்து சென்னை வரை இயக்கப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) வருகிற மே 2-ந் தேதி மற்றும் 16-ந் தேதிகளில் நெல்லையில் இருந்து தென்காசி வழியாக விருதுநகருக்கு செல்லும். அதாவது மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர் ஆகிய ரயில் நிலையங்களுக்கு மேற்கண்ட தேதிகளில் செல்லாது.