சென்னை: கர்நாடகாவில் பொதுக்கூட்டத்தின்போது ஒலிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்துள்ளார்.
தெலுங்கானா மற்றும் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாவேந்தர் பாரதிதாசனின் 113-வது பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. புதுச்சேரியில் தமிழ்த்தாய் பாடல் எழுதியது பாவேந்தர் பாரதிதாசன் தான் என்பது கூடுதல் பெருமை. பாரதியாரும் பாரதிதாசனும் புதுவையோடு ஒன்றியவர்கள் என்பதால் அவர்களுக்கு மரியாதை செய்வது பெருமையாக உள்ளது.
பிரதமர் மோடியின் மனதின் குரல் 100-வது நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம். இளைஞர்கள் அந்த நிகழ்ச்சியை கேட்க வேண்டும். அரசியல் கலவாத நிகழ்ச்சியாக மனதின் குரல் நிகழ்ச்சி உள்ளது. புதுவையில் பெண்களுக்கு பணியில் 2 மணி நேரம் குறைக்கப்பட்டதற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது” என்றார்.
அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவாக வைக்கப்படும் பேனா நினைவுச்சின்னத்திற்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், சுற்றுச்சூழலை மனதில் வைத்து அனுமதி கொடுத்து இருக்கிறார்கள்.
சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் இது கருணாநிதிக்கே ஏற்புடையதாக இருந்து இருக்காது. எனவே எல்லா விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளோடு அது கட்டமைப்பதற்குதான் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதை அரசு பின்பற்ற வேண்டியதுதான். கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது குறித்து கேட்கிறீர்கள்..அது பற்றி அண்ணாமலை வருவார் அவரிடம் கேளுங்கள்” என்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில், சிவமொக்கா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கர்நாடக மாநில தேர்தல் பாஜக இணை பொறுப்பாளர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.
கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்டதும் உடனே குறுக்கிட்ட பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை நிறுத்துமாறு அறிவுறுத்தினார். தொடர்ந்து கன்னட வாழ்த்துப் பாடல் ஒலிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகள் நடைபெற்ற போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் மேடையிலேயே நின்று கொண்டிருந்தார்.
ஆனால், அண்ணாமலை இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. எனினும், இது தொடர்பாக நேற்று விளக்கம் அளித்த அண்ணாமலை, தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலின் மெட்டு சரியின்றி அவமதிப்பது போல் இருந்ததால் அது நிறுத்தப்பட்டதாக கூறியிருந்தார்.