தானியங்கி மது வழங்கும் எந்திரமும், டாஸ்மாக் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியும் நேற்று முதல் பேசு பொருளாக உள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் தானியங்கி மது வழங்கும் எந்திரம் நிறுவப்பட்டுள்ளது. மதுவை ஒழிக்க குரல் கொடுத்து வரும் மாநிலத்தில், நவீன முறையில் மது வழங்கும் எந்திரம் என சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை கிளப்பியது. மது வாங்கும் நபர் 21 வயது நிரம்பியவரா என்பதை எந்திரம் எவ்வாறு கண்டுபிடிக்கும் என கேள்விகள் எழுப்பப்பட்டது.
1,000 எடப்பாடி வந்தாலும் ஒரு ஓபிஎஸ்க்கு சமம் ஆகுமா?
அதையடுத்து தமிழ்நாடு வாணிப கழகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தினால் 101 இடங்களில் வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது. இச்சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை விலையை விட கூடுதல் செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களை தடுக்கும் வகையில் நான்கு மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மட்டுமே, கடைகளுக்கு உள்ளேயே தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் (Automatic Vending Machine) நிறுவ நடவடிக்கையில் உள்ளது.
தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம், வணிக வளாக சில்லறை விற்பனை கடைகளுக்கு (Mall Shops) உள்ளேயே நிறுவப்பட்டுள்ளது. மேலும் தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் விற்பனைகளும் மேற்பார்வையாளர்கள் மூலம் செய்யப்படும் அனைத்து மற்றும் கடைப் பணியாளர்களாகிய விற்பனையாளர்களின் முன்னிலையிலேயே நடைபெறும் வகையில் நிறுவப்பட்டுள்ளது’’ என்று விளக்கம் அளித்தது.
இதை கடுமையாக சாடிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ‘‘21 வயது நிரம்பியவர்களுக்கு மதுபானம் வழங்க கூடாது என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் நிலையில், தானியங்கி மது விற்பனை எந்திரம் கொண்டுவரப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் நவீனமாகி வரும் கல்வித்துறை மற்றும் சுகாதரத்துறைகளில் கூட எந்த ஒரு நவீன திட்டத்தை கொண்டுவராத இந்த விடியா
அரசு, மது விற்பனைக்கு நவீன திட்டத்தை கொண்டு வந்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது’’ என்று தெரிவித்தார்.
இந்தநிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘‘கோயம்பேட்டில் ஏற்கனவே செயல்பட்டுவரும் Mall shopகளில் தான் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டிருக்கிறதென தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் நேற்றே தெளிவான குறிப்பை வெளியிட்ட பிறகும், ‘உள்ளேன் அய்யா’ என இருப்பை காட்டிக்கொள்ள, உண்மைக்கு மாறாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் பழனிசாமி’’ என அவர் தெரிவித்துள்ளார்.