அண்ணா காலத்து அரசியல்வாதியான மதிமுக அவைத் தலைவர் சு.துரைசாமி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுக்கு எழுதியுள்ள கடிதம் அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. `30 ஆண்டுகாலமாக உங்கள் உணர்ச்சிமயமான பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தொண்டர்களை இனியும் ஏமாற்றாதீர்கள். மதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை. தாய்க் கழகமான திமுகவுடன் இணைப்பதே நல்லது’ என அக்கடிதத்தில் குறிப்பிடிருந்தார்.
இக்கடிதம் குறித்து சு.துரைசாமியிடம் நாம் பேசினோம்… அப்போது அவர், “வாரிசு அரசியலை எதிர்க்க வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு உதவ வேண்டும். ஊழலற்ற அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று பேசியவர் வைகோ. மிகச் சிறந்த பேச்சாற்றல், நினைவாற்றல் கொண்டவர். அந்த வகையில் அவரின் செயல்பாடும் நேர்மையாக இருக்குமென்று கருதி தமிழகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் 1993-ஆம் ஆண்டு இறுதியில் வைகோவை நம்பி திமுகவில் இருந்து பிரிந்து மதிமுகவில் இணைந்தோம்.
இந்த 30 ஆண்டுகளில் தேர்தல் நேரங்களில் அவர் எடுத்த முடிவுகளாலும், பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் பேசிய பேச்சுக்களாலும் மதிமுகவுக்கு பின்னடைவுதான் ஏற்பட்டுள்ளது. இது மதிமுக மீது மக்கள் நம்பிக்கை இழக்கவும் காரணமாக அமைந்தது. எந்த வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி ஆரம்பித்தாரோ அதற்கு நேர்மாறாக, மதிமுகவில் இன்று குடும்ப அரசியலை ஊக்குவிக்கும் வகையில் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
மதிமுக விதிகள்படி, பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்கள் என்று எடுத்துக் கொண்டால் அவைத் தலைவர், பொதுச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர், ஆட்சிமன்றக் குழு மற்றும் தணிக்கை குழு உறுப்பினர்களால்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மற்றவை பொதுச் செயலாளரால் நியமிக்கும் பதவிகள்.
வைகோவின் மகன் துரை வைகோவை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று மாவட்டச் செயலாளர்கள் பல பேர் அறிவுறுத்தியும் கூட, ஏதோ ஜனநாயக முறையில் துரை வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டதைப்போல, வெளி உலகத்துக்கு வைகோ காண்பித்தார்.
12 ஆண்டுகளாக உறுப்பினர்கள் சேர்க்கை நடத்தாமல் கட்சி விதிகளை வைகோ மீறியுள்ளது வெளிப்படையாக தெரிகிறது. 30 ஆண்டுகாலமாக உங்கள் உணர்ச்சிமயமான பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தொண்டர்களை இனியும் ஏமாற்றாதீர்கள். இனி மதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை என்ற காரணத்தினால்தான் திமுகவுடன் இணைத்துவிடுவதோ கட்சிக்கும் நல்லது, தொண்டர்களுக்கும் நல்லது.
திருப்பூர், ஈரோடு மாநகராட்சியில் உட்கட்சி தேர்தல் அண்மையில் நடைபெற்றது. ஆனால், கட்சி விதி 13 பிரிவு 4-இன்படி, வட்டக் கிளையில் 100 பேருக்கு மேல் இருந்தால்தான், அது வார்டு என்ற நிலையை அடைய முடியும். அப்படியிருக்கையில் உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றிருக்குமேயானால், அவர்களது பெயரையும், ஆதார் எண்ணையும் கட்சிப் பத்திரிகையான சங்கொலியில் வைகோ வெளியிடத் தயாரா? மேலும், கடந்த 2022 மார்ச் மாதம் 23-ஆம் தேதி பொதுக் குழு நடைபெற்றபோது, செய்தியாளர்கள் சந்திப்பில், 1,490 பொதுக் குழு உறுப்பினர்கள் உள்ளதாகவும், அதில் 1,284 தற்போது கலந்துகொண்டதாக உண்மைக்குப் புறம்பான தகவலை வைகோ தெரிவித்தார்.
இதுபோன்ற பல கேள்விகளை முன்வைத்து வைகோவுக்கு 5 முறை கடிதம் எழுதியுள்ளேன். இதுவரை எந்த கடிதத்துக்கும் பதில் வந்தது இல்லை. தற்போது, எனது கடிதத்துக்கு பதில் வரும் என காத்துக் கொண்டிருக்கிறேன். பெரியார், அண்ணா கொள்கைகளால் வளர்க்கப்பட்டவன் நான். கட்சி ஆரம்பிப்பதோ அல்லது திமுகவில் இணையும் எண்ணமோ எனக்கில்லை” என்றார்.
சு.துரைசாமியின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மதிமுக திருப்பூர் மாநகரச் செயலாளர் ஆர்.நாகராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மதிமுகவினர் அனைவரும் வைகோவுக்கு பின்னால் இருக்கிறோம். வைகோவை பயன்படுத்திக் கொன்டு இன்று அவரையே துரைசாமி குறை கூறுகிறார்.திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முதலில் எதிர்ப்பு தெரிவித்தவரே துரைசாமிதான்.
தற்போது அவர் மதிமுகவை திமுக கூட்டணியில் இணைக்க வேண்டுமென கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது. மதிமுகவில் போலி உறுப்பினர் என அவமரியாதை செய்வது வருத்தமளிக்கிறது. இதுதொடர்பாக பொதுச் செயலாளர் வைகோவுடன் தொலைபேசியில் பேசும்போது, பொறுமையாக இருக்க அறிவுறுத்தி உள்ளார்” என்றார்.