நியூயார்க்: ஹப்பிள் தொலைநோக்கி பூமியின் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்பட்டு 33 வருடங்கள் கொண்டாடும் வகையில் புதிய புகைப்படம் வெளியாகி உள்ளது.
ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி 1990-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியிலிருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் தொலைநோக்கி இதுவாகும். ஹப்பிள் தொலைநோக்கி ஒரு பேருந்து அளவுள்ளது. 97 நிமிடத்துக்கு ஒருமுறை பூமியை ஹப்பிள் சுற்றி வருகிறது. (இந்த வேகத்தில் சென்றால் சுமார் ஒன்றரை நிமிடத்தில் சென்னையிலிருந்து திருச்சி சென்றுவிடலாம்). அகச்சிவப்பு கதிர், புறஊதா கதிர், காணுறு ஒளி ஆகிய மூன்று அலைநீளங்களில் நிறமாலைமானி மற்றும் காட்சி செய்யும் திறன் கொண்டது. 0.05 வினாடி டிகிரி விலகியுள்ள பொருட்களைக்கூட பிரித்து இனம் காணும் காட்சித் திறன் கொண்டது.
இந்த ஹப்பிள் தொலை நோக்கியை பூமியின் சுற்றுவட்ட பாதையில் செலுத்தி 33 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஹப்பிள் எடுத்த புதிய புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
ஹப்பிள் இம்முறை ’NGC 1333’ என்ற விண்வெளி பகுதியை படம்பிடித்து அனுப்பியுள்ளது. ’NGC 1333’ என்பது நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியாகும். இவை பெகாசஸ் விண்மீன் தொகுப்பில் உள்ள ஒரு பிரதிபலிப்பு நெபுலா ஆகும். இது பூமியிலிருந்து சுமார் 960 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
1990-இல் பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட ஒரு தொலைநோக்கி, பல ஆண்டுகள் கடந்தும் ஹப்பிள் இன்னமும் செயல்பாட்டில் உள்ளது. ஹப்பிளின் செயல்பாடுகள் பற்றி நாசா சமீபத்தில், மதிப்பாய்வை நடத்தியது. இதன் முடிவில் 2030 வரை ஹப்பிள் செயல்பாட்டில் இருக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.