புதுடில்லி: பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ., – எம்.பி.,யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர்களை காங்., பொதுசெயலர் பிரியங்கா சந்தித்து ஆறுதல் கூறினார்.
சர்வதேச மல்யுத்த போட்டிகளில் நம் நாட்டின் சார்பாக போட்டியிட்டு பதக்கங்களை வென்ற ஏழு பெண் மல்யுத்த வீராங்கனைகள், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ., – எம்.பி.,யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் புகார் தெரிவித்து, கடந்த ஜன., மாதம், மூன்று நாள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த, பாக்சிங் வீராங்கனை மேரி கோம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு விசாரணையை முடித்து, மத்திய விளையாட்டு துறை அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை வெளியிடவும், குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்குப் பதிவு செய்யவும் கோரி ஏழு பெண் மல்யுத்த வீராங்கனைகள், 24 முதல் புதுடில்லி ஜன்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதற்கிடையே, சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. ஏழு வீராங்கனைகளில் 18 வயதுக்கு குறைவான சிறுமி ஒருவருக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மற்றவர்களின் பாதுகாப்பு குறித்து, புதுடில்லி போலீஸ் கமிஷனர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ., – எம்.பி.,யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சித்ரவதை செய்தாலும் பரவாயில்லை
இது குறித்து மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: போராட்டம் நடத்தும் போது போலீசார் எங்களை அலட்சியப்படுத்தினர். உச்சநீதிமன்றத்தின் அழுத்ததால் தான், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதி கிடைக்கும் வரை, போலீஸ் நிர்வாகம் எவ்வளவு சித்ரவதை செய்தாலும் போராட்டம் நடத்துவோம் என்றார்.
சந்திப்பு
டில்லி ஜந்தர் மந்தரில், பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்திய, மல்யுத்த வீரர்களை காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா சந்தித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்