கோண்டா (உ.பி): தன் மீதான பாலியல் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும், எந்த ஒரு விசாரணைக்கும் தான் தயார் என்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் தெரிவித்துள்ளார். மேலும், “ஒரு குற்றவாளியாக நான் பதவி விலக மாட்டேன். இந்த சர்ச்சையின் பின்னணியில் காங்கிரஸ் இருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மல்யுத்த வீராங்கனைகளிடம், பிரிஜ் பூஷன் சிங் பாலியல் ரீதியில் அத்துமீறி நடந்து கொண்டதாக 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்து பிரிஜ் பூஷன் சிங்கை நீக்க வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த 23-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று (சனிக்கிழமை) அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மேலும், பிரிஜ் பூஷண் சிங்கை அரசு பாதுகாப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். | வாசிக்க > டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்த பிரியங்கா காந்தி: பிரிஜ் பூஷனை அரசு பாதுகாப்பதாக குற்றச்சாட்டு
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தின் பிஷ்னோர்பூரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை பிரிஜ் பூஷன் சிங் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “நான் நிரபராதி. உச்ச நீதிமன்றத்தின் மீதும், டெல்லி போலீஸ் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. எந்த ஒரு விசாரணைக்கும் நான் தயார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவது எனக்கு பெரிய விஷயமல்ல. ஆனால், ஒரு குற்றவாளியாக நான் பதவி விலக மாட்டேன்.
இந்தச் சர்ச்சையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது இன்று வெளியே வந்துவிட்டது. தொழிலதிபர் ஒருவரும், காங்கிரஸ் கட்சியும் இந்த சர்ச்சையின் பின்னணியில் இருப்பதாக நான் தொடக்கத்தில் இருந்தே கூறி வருகிறேன். ஏனெனில், அவர்கள் என் மீது கோபத்தில் இருக்கிறார்கள். பதவியை ராஜினாமா செய்வதற்கு, நான் குற்றவாளி அல்ல. நான் ராஜினமா செய்தால், குற்றத்தை ஒப்புக்கொண்டதாக ஆகிவிடும்.
என் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இருந்தும் அவர்கள் ஏன் போராட்டத்தை தொடர்கிறார்கள்? இது மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் அல்ல; சதிகாரர்களின் போராட்டம். விசாரணை அறிக்கை வெளியாகும் வரை காத்திருக்க அவர்கள் தயாராக இல்லை. மல்யுத்த விளையாட்டு காக்கப்பட வேண்டும் என அவர்கள் கோருகிறார்கள்.
உண்மையில் கடந்த 4 மாதங்களாக அவர்கள் மல்யுத்த விளையாட்டிற்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். நான் 12 ஆண்டுகளாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருக்கிறேன். நான் பாலியல் குற்றம் இழைத்திருந்தால், ஏன் காவல் நிலையத்தில் யாரும் புகார் அளிக்கவில்லை. சட்டத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன்” என்று பிரிஜ் பூஷன் சிங் தெரிவித்துள்ளார்.