மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு | பிரிஜ் பூஷன் மீது டெல்லி போலீஸ் 2 பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் மீது மல்யுத்த வீராங்கனைகள் கூறிய பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி கனோட் ப்ளேஸ் காவல்நிலையத்தில் இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

டெல்லி காவல் ஆணையர் ப்ரணவ் தாயல் கூறுகையில், “மல்யுத்த வீராங்கனைகள் புகார் மீது இரண்டு எஃப்ஐஆர்க்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்றார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை கூறி கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அமைத்தது. இந்தக் குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை வழங்கிவிட்டது. எனினும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டம் நடந்துவரும் சூழலில் இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படாதது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள் உடனடியாக எஃப் ஐ ஆர் பதிவு செய்யும்படி வலியுறுத்தினர். அதற்கு டெல்லி போலீஸ் தரப்பு இந்த வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும் என்று உறுதியளித்தது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் 2 எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் கூறியவர்களில் ஒருவர் சிறுமி என்பதால் போக்ஸோ பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக நேற்று மல்யுத்த வீராங்கனைகள் அளித்தப் பேட்டியில், “நாங்கள் உச்ச நீதிமன்ற கருத்தை மதிக்கிறோம். ஆனால் எங்களுக்கு டெல்லி போலீஸ் மீது நம்பிக்கை இல்லை. இந்த போராட்டம் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்காக மட்டும் அல்ல. குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.