டெல்லியில் மல்யுத்த வீராங்கனை பாலியல் புகார் தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், பாஜக எம்.பி. பிரிஷ் பூஷன் சரண்சிங் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்திற்கு கபில்தேவ், சானியா மிர்சா, நீரஜ் சோப்ரா என பலதுறை விளையாட்டு வீரர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி, வீராங்கனைகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பதிலளித்த டெல்லி காவல்துறை தரப்பு, உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்படும் என உறுதியளித்தது. அதன்படி, பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
newstm.in