வாஷிங்டன்-பாகிஸ்தானுக்கான ராணுவ நிதியுதவியை திரும்ப அளிக்கும்படி, அமெரிக்காவிடம் பாக்., துாதர் வலியுறுத்தி உள்ளார்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலை நாட்டும் பணியில் அமெரிக்க படைகள் முகாமிட்டிருந்தன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க படைகள் ஆப்கனிலிருந்து வெளியேறின. இதற்கு பின், பாகிஸ்தானுக்கும், அமெரிக்கவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
பாக்., சீனாவிடம் நெருக்கம் காட்டுவதும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு உதவுவதும் அமெரிக்காவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து முந்தைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பாகிஸ்தானுக்கான ராணுவ நிதி உதவி மற்றும் ஆயுதங்கள் விற்பனைக்கு தடை விதித்திருந்தார்.
இந்நிலையில், சமீப காலமாக பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நேற்று நடந்த கருத்தரங்கில், அமெரிக்காவுக்கான பாக்., துாதர் மசூத் கான் பேசியதாவது:
தற்போது பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது, டொனால்டு டிரம்ப் பதவிக் காலத்தில் பாகிஸ்தானுக்கான ராணுவ நிதி உதவி மற்றும் ஆயுதங்கள் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும். மீண்டும் பாகிஸ்தானுக்கான ராணுவ நிதி உதவி மற்றும் ஆயுத விற்பனையை அமெரிக்கா அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கடன் நெருக்கடி
பாகிஸ்தானிலிருந்து வெளியாகும், ‘பிசினஸ் ரெகார்டர்’ என்ற பத்திரிகையில், அந்த நாட்டைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் அதிக் உர் ரஹ்மான் கட்டுரை எழுதியுள்ளார்.
அதில், ‘வெளிநாட்டு கடன் நெருக்கடியில் சிக்கி, மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள, 15 நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானும் உள்ளது’ என, தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த, அமைதிக்கான பயிற்சி மையம் என்ற அமைப்பு வெளியிட்டு உள்ள இந்த கட்டுரையில், ‘வரும், 2026 ஜூலைக்குள், சீனா, சவுதி அரேபியா ஆகிய இரு நாடுகளுக்கு மட்டும், பாகிஸ்தான், 3.61 லட்சம் கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்’ என, எழுதப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்