மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி.!
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. கட்சியின் தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி உயிரிழந்தார். அவரின் நினைவாக சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தமிழக அரசு, நடுக்கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட ‘பேனா’ நினைவுச் சின்னமும் அமைக்க திட்டமிட்டுள்ளது.
அதற்காக மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்பட பல்வேறு துறைகளில் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து தமிழக அரசு பொதுமக்களிடமும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது. அதன் பின்னர் பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்க கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
மேலும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை, தமிழக பொதுப்பணித்துறை மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவிடம் சமர்ப்பித்தது. இந்த நிலையில், மத்திய அரசு பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி அளித்துள்ளது.