மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி.. நிபந்தனைகள் என்னென்ன?

சென்னை: சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க சில நிபந்தனைகளுடன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி கொடுத்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட ‘பேனா’ நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது.

இந்த நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. கருணாநிதி நினைவிடத்திற்கு பின் பகுதியில் பெரிய நுழைவு வாயில் அமைத்து கண்ணாடி பாலம் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று பேனா நினைவு சின்னத்தை பார்வையிடும் வகையில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நினைவு சின்னம் அமைப்பதற்காக மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்பட பல்வேறு துறைகளில் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த ஜனவரி மாதம் பொதுமக்களிடம் தமிழக அரசு கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது இதில் பேனா நினைவு சின்னத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கலைஞர் பேனா நினைவு சின்னத்துக்கான சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை மத்திய அரசின் சுற்றுச் சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது. மேலும் இந்த அறிக்கையின் அடிப்படையில் கலைஞர் பேனா நினைவு சின்னத்துக்கு ஒப்புதல் வழங்கவும் தமிழ்நாடு அரசு கோரியிருந்தது.

இந்த நினைவு சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பி இருந்தது. இந்த நிலையில், சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய சுற்றுசூழல் துறை அனுமதி கொடுத்துள்ளது. சில நிபந்தனைகளுடன் மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழு அனுமதி கொடுத்துள்ளது.

Pen Monument: M Karunanidhi in Chennai Marina: Central Govt approves with certain conditions

கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி நடைபெற்ற சுற்றுச்சூழல் அமைச்சக கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்று அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து விரைவில் கடலோர ஒழுங்கு முறை மண்டலமும் அனுமதி கொடுக்க வாய்ப்பு உள்ளது. பேனா சின்னம் அமைப்பதற்கு முன் ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்று பெற வேண்டும்.

கட்டுமான பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது. திட்டத்தை செயல்படுத்தும் போது நிபுணர் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். கடலோர பாதுகாப்பு மண்டல விதிகளுக்கு உட்பட்டு கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் உள்பட 15 நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.