புதுடெல்லி
இந்திய வானிலை ஆய்வு மையம் மே மாதத்திற்கான வெப்ப நிலை மற்று மழை நிலவரம் குறித்த தகவலை வெளியிட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* 2023க்கான மே மாதத்தில் கிழக்கு-மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் வடகிழக்கு மற்றும் தீபகற்ப இந்தியாவின் சில பகுதிகளிலும் வெப்பம் இயல்பை விட அதிகமாக இருக்கும். வடமேற்கு மற்றும் மேற்கு-மத்திய இந்தியாவில் வெப்பம் இயல்பை விட குறைவாக இருக்கும்.
* வடமேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகள் இயல்பான மற்றும் குறைவான குறைந்தபட்ச வெப்பநிலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, சில பகுதிகளில் இயல்பிற்கு மேல் குறைந்தபட்ச வெப்பநிலை இருக்கும்.
* மே மாதத்தில் பீகார், ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம், கிழக்கு உத்தரப் பிரதேசம், கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் வடக்கு சத்தீஸ்கரின் சில பகுதிகள், கிழக்கு மத்தியப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் கடலோர குஜராத்தின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகமான வெப்பம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
* மே 2023 இல் நாட்டின் சராசரி மழைப்பொழிவு சாதாரணமாக இருக்கும். 1971-2020 வரையிலான தரவுகளின் அடிப்படையில் மே மாதத்தில் நாடு முழுவதும் மழையின் அளவு சுமார் 61.4 மிமீ ஆகும்.
* வடமேற்கு இந்தியாவிலும், மேற்கு-மத்திய இந்தியாவின் பல பகுதிகளிலும், தீபகற்ப இந்தியாவின் வடக்குப் பகுதியிலும் இயல்பை விட அதிகமான மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலும், கிழக்கு-மத்திய இந்தியாவின் பல பகுதிகளிலும் மற்றும் தென் தீபகற்ப இந்தியாவிலும் இயல்பை விட குறைவான மழையே பெய்யக்கூடும்.
* டெல்லி, அரியானா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட வடமேற்கு இந்தியாவில், மே மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பானதாக இருக்கும், அதேசமயம் மழைப்பொழிவுவும் இயல்பானதாக இருக்கும்
.
* மே 1 திங்கள் வரை கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடரும். கடந்த ஐந்து நாட்களாக மாநிலத்தில் பல இடங்களில் மழை பதிவாகி வருகிறது. மழை முன்னறிவிப்பைக் கருத்தில் கொண்டு, ஐஎம்டி அடுத்த ஐந்து நாட்களுக்கு இடுக்கியில் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
* எர்ணாகுளம், இடுக்கி மற்றும் பாலக்காடு மாவட்டங்களுக்கு ஐஎம்டி சனிக்கிழமை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை, திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் பாலக்காடு ஆகிய இடங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
* மே 2 ஆம் தேதி, திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் இடுக்கி ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாட்களில் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.