புதுடில்லி, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெறக் கோரி, ‘யு டியூபர்’ மணீஷ் காஷ்யப் தொடர்ந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு அவகாசம் அளித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில், வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக, பீஹாரைச் சேர்ந்த, யு டியூபர் மணீஷ் காஷ்யப், போலியான ‘வீடியோ’க்களை வெளியிட்டார்.
இது தொடர்பாக, பீஹார் மற்றும் தமிழகத்தில் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த புகாரில், யு டியூபர் மணீஷ் காஷ்யபை கைது செய்த தமிழக போலீசார், அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, மணீஷ் காஷ்யப் மீது, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதை எதிர்த்தும், தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை, ஒரே வழக்காக சேர்க்கக் கோரியும், உச்ச நீதிமன்றத்தில், மணீஷ் காஷ்யப் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, ”மணீஷ் காஷ்யப் தொடர்ந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும்,” எனக் கோரினார். இதை ஏற்ற அமர்வு, தமிழக அரசுக்கு அவகாசம் அளித்து, வழக்கை மே 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement