ராகுல் காந்தி அவதூறு வழக்கு.. உயர்நீதிமன்றத்தில் காரசாரம்.. என்ன தீர்ப்பு வரப்போகுதோ.?

வழக்கு முடியும் வரை சிறை தண்டனையை நிறுத்தி வைக்குமாறு ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

ராகுல் காந்தி

காங்கிரஸ்
கட்சியின் துடிப்பான தலைவராக ராகுல் காந்தி உள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அவர் நடத்திய இந்திய ஒற்றுமை பேரணிக்கு பொதுமக்கள் பெரும் ஆதரவு அளித்தனர். ஒன்றிய பாஜக அரசையும், அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ஐயும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

அதேபோல் தொழிலதிபர் அதானிக்கு நாட்டின் வளங்கள் கொடுக்கப்பட்டது பற்றியும், பிரதமர் மோடிக்கும் அதானிக்குமான உறவு குறித்தும், அதானியின் மோசடி மற்றும் அதானியின் ஷெல் கம்பெனிகளில் சீன முதலீடு குறித்தும் கடுமையாக பேசி வருகிறார். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் வாதம் நாடு முழுவதும் பேசு பொருளானது.

இந்த சூழலில் கடந்த 2019ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘‘மோடி என்ற பெயரை வைத்தவர்கள் எல்லாம் திருடர்களாகவே இருந்து வருகின்றனர்’’ என பேசினார். அதைத் தொடர்ந்து ஓபிசி பிரிவினரை அவமதித்து விட்டதாக கூறி குஜராத் முன்னாள் பாஜக அமைச்சர் பூர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். சுமார் இரண்டு ஆண்டுகள் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த மார்ச் 23ம் தேதி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறை தண்டனை

இந்திய அரசியலமைப்பின் படி, ஒரு எம்பி அல்லது எம்எல்ஏ-வுக்கு இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைதண்டனை விதிக்கப்பட்டால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, பதவி பறிக்கப்படும். அந்தவகையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை பறித்து அவரை தகுதிநீக்கம் செய்தது மக்களவை செயலகம். மோடி அதானி குறித்து ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசக்கூடாது என்பதற்காகவே, நீதிபதி மாற்றி பாஜக சார்பு நீதிபதியை வைத்து ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கப்பட்டதாக திருமாவளவன் உள்பட பல்வேறு எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின.

அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்திய நிலையில், காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் தனக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நீக்க கோரியும், வழக்கு நடைபெறும் வரையில் தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரியும் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், தண்டனை செல்லும் என்று கூறி ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது.

அதை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்று வருகிறது. நீதிபதி ஹேமந்த் பிரச்சாக் முன்பு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி சார்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதாடி வருகிறார். வழக்கு முடியும் வரை தண்டனையை நிறுத்தாவிட்டால் 8 வருட அரசியல் வாழ்க்கை வீணாகிவிடும் என ராகுல் தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.