சென்னை: ரேஷன் கடைகளில் பொதுமக்கள் வாங்காத பொருட்களுக்கும் சேர்த்து பில் போடுவது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரேஷன் கடை பணியாளர்களுக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா முழுவதும் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான அளவில் ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் 39 மாவட்டங்களில் 316 வட்டங்களில் சுமார் 34,803 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மத்திய மாநில அரசுகள் வழங்கும் உணவு பொருட்கள் மானிய விலையில் இந்த ரேஷன் கடைகள் வாயிலான விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 2,23,79,057 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகிறார்கள். ஆனால் சில ரேஷன் கடைகளில் ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கும் போது தகாத வார்த்தைகளால் பொது மக்களை பேசுவது, பொருட்கள் இருந்தாலும் இல்லையென்று சொல்வது, நாட்கணக்கில் அலைய வைப்பது, கள்ள சந்தையில் விற்பது போன்ற புகார்கள் தொடர்ந்து வந்துக்கொண்டுதான் இருக்கின்றன. முன்பெல்லாம் அட்டைதாரர்கள் ஓரிரு மாதம் வாங்காத பொருட்களை வாங்கியதாக கணக்கு காட்டி அதனை கள்ள சந்தையில் விற்பனை செய்வதாக ஊழியர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுபோன்ற முறைகேடுகளை தடுக்கதான் விற்பனை முழுவதும் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டது.
இதன் காரணமாக பொருட்களை யார் வாங்கினார்கள், யார் வாங்கவில்லை என்கிற விவரம் முழுமையாக அதிகாரிகளின் கைகளுக்கு கிடைத்தது. அதேபோல வாங்கிய பொருட்கள் குறித்த அறிவிப்பும் எஸ்எம்எஸாக பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கும் வந்துவிடும். ஆனால் இதிலும் சில சிக்கல் மேலெழுந்துள்ளது. அதாவது நுகர்வோர்கள் வாங்கிய பொருட்களுடன் வாங்காத பொருட்களும் வாங்கியதாக எஸ்எம்எஸ் வருகிறது என பலர் குற்றம்சாட்டியுள்ளனர். அதாவது இந்த மாதம் ஒரு குடும்ப அட்டைதாரர் புழுங்கல் அரியை மட்டும் வாங்குகிறார் எனில் அவர் பச்சரிசி, கோதுமை போன்றவற்றையும் வாங்கியதாக சேர்த்து பில் போடப்பட்டு எஸ்எம்எஸ் வந்துவிடுகிறது.
அதாவது கூடுதலாக போடப்பட்ட பொருட்கள் அனைத்தும் கடை ஊழியர்கள் மலிவு விலையில் பெற்று கள்ள சந்தையில் விற்பனை செய்துவிடுகிறார்கள் என்பதுதான் இந்த புகாரின் சாராம்சம். இதன் மூலம் மக்கள் எந்த உணவு பொருட்களை அதிகம் வாங்குகிறார்கள்? எதனை தவிர்க்கிறார்கள் என்கிற புள்ளி விவரங்கள் அதிகாரிகளுக்கு தெரிய வருவதில்லை. இவ்வாறு கள்ள சந்தையில் பொருட்கள் விற்பனை செய்வதன் மூலம் எல்லா உணவு பொருட்களுக்கும் மக்களிடம் டிமான்ட் இருக்கிறது என்கிற தோற்றம் உருவாக்கப்பட்டுவிடுகிறது.
எவ்வளவோ முயன்றும் இதனை தடுக்க முடியவில்லை என்று மக்கள் புலம்பி வருகின்றனர். இப்படி இருக்கையில்தான் தற்போது அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது பொதுமக்கள் வாங்காத பொருட்களை வாங்கியதாக பில் போடப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். இதன் மூலம் ரேஷன் கடை ஊழியர்கள் தங்கள் கடைகளில் மீதமிருக்கும் உணவு பொருட்கள் குறித்த உண்மையான டேட்டாவை பதிவு செய்து அதிகாரிகளுக்கு வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ரேஷன் கடைகளில் உள்ள குளறுபடிகள் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கு மொபைல் எண் வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது 9773904050 எனும் மொபைல் எண்ணுக்கு PDS 107 என டைப் செய்து கடை எண்ணை குறிப்பிட்டு என்ன புகார் என்பதையும் எஸ்எம்எஸ் மூலம் நாம் தெரிவிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.