151-வது நாளை எட்டிய திருமண்டங்குடி விவசாயிகள் போராட்டம் – நம்பிக்கை அளித்த அன்பில் மகேஸ்

தஞ்சாவூர்: 151 நாட்களாகத் தொடரும் திருமண்டங்குடி கரும்பு விவசாயிகள் போராட்டம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் நம்பிக்கையுடன் கூறியிருப்பதாக தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க அகில இந்தியப் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.300 கோடி முழுவதையும் திரும்பச் செலுத்தி, விவசாயிகளை சிபில் ஸ்கோர் பிரச்சினையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆலையைத் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சர்க்கரை ஆலை முன்பு கடந்த நவம்பர் 30-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டத்தின் 151-வது நாளான இன்று, தமிழ்நாடு விவசாயச் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், மாவட்டச் செயலாளர் என்.வி,கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், ஆலை சங்கத்துணைச் செயலாளர் சரபோஜி, ஆலை சங்கத் தலைவர் நாக.முருகேசன் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்றுக் கண்டன முழக்கமிட்டனர்.

இதில் பங்கேற்ற தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க அகில இந்தியப் பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் கூறும்போது, “ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகள் பெயரில் கடனை வாங்கி ஏமாற்றியுள்ளார்கள். இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 28-ம் தேதி அமைச்சர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், வட்டியுடன் சேர்த்து விவசாயிகளுக்கு ரூ.157 கோடியும், விவசாயிகள் பெயரில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்து, ஆட்சேபனை இல்லாத சான்றிதழ்களும் வழங்க வேண்டும், மேலும், விவசாயிகளிடம் பிடித்தம் செய்த ரூ.40 கோடிக்கும் அதிகமான கரும்பு பயிர்க் கடனை, வங்கிக்கு செலுத்தாமல் ஏமாற்றியுள்ளதற்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆலை நிர்வாகம் நிறைவேற்றாவிட்டால், இந்த ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தினோம்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி, அடுத்த மாதம் 8-ம் தேதி முதல்வருடன் கலந்து பேசி, உரிய முறையில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.