நாடு திரும்பிய லிட்டன் தாஸ்:
வங்கதேச அணி வீரரான லிட்டன் தாஸ், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று தனது சொந்த நாடான வங்கதேசத்திற்குச் சென்றுள்ளதாக கொல்கத்தா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. “லிட்டன் தாஸ் குடும்பத்தில் ஏற்பட்ட அவசர மருத்துவச் சூழல் காரணமாக நாட்டிற்குத் திரும்பியுள்ளார். இந்தக் கடினமான நேரத்தைக் கடக்க அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எங்கள் வாழ்த்துகள்” என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவர் இந்த ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாடுவாரா என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியிடவில்லை.
காயத்தில் ஸ்டாய்னிஸ்:
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி அதிரடி வெற்றியைப் பதிவு செய்தது. இதில் லக்னோ அணியின் மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியாக விளையாடி, 40 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து அசத்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் 3வது ஓவரை ஸ்டாய்னிஸ் வீசிய போது, ஒவரின் 5வது பந்தை பஞ்சாப் வீரரான அதர்வா டைட் எதிர் கொண்டார்.
அவர் அடித்த பந்தைத் தடுக்க முயன்ற போது, ஸ்டோய்னிஸுக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் ஆட்டத்திலிருந்து வெளியேறினார். 1.5 ஓவர்கள் வீசிய இவர், ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். இப்போட்டியில் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார் ஸ்டாய்னிஸ்.
பஞ்சாப்பைப் பந்தாடிய லக்னோ:
பஞ்சாபில் உள்ள மொஹாலி மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. இதில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய லக்னோ அணி, 257 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில், ஒரு அணி எடுத்த 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இரண்டாவது இன்னிங்ஸில் பஞ்சாப் அணி 201 ரன்கள் எடுத்தது. கடந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 ஓவர்களில் 128 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்த ஆட்டத்தில் 10 ஓவர்களிலேயே 128 ரன்களைக் கடந்து விஸ்வரூபம் எடுத்துள்ளது, லக்னோ அணி.
இது போதும் எனக்கு, இது போதுமே!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் துருவ் ஜூரேலை ரன் அவுட் செய்தார், எம்.எஸ்.தோனி. இது பற்றி பேசிய துருவ், “20 ஆண்டுகளுக்குப் பிறகு கூட சி.எஸ்.கே vs ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டத்தின் ஸ்கோர் கார்டைப் பார்க்கும்போது, தோனி சார் என்னை ரன் அவுட் செய்தார் என்று சொல்வேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன். அதுவே எனக்குப் போதும்.” என நெகிழ்ந்து பேசியுள்ளார்.
ரோஹித்தின் 10 வருட பயணம்:
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் பதவியேற்றார். தற்போது இந்த 2023 சீசனுடன் பத்து வருடங்கள் ஆகியுள்ளன. இதைக் கொண்டாடும் விதமாக,
“நாளை வான்கடேவில் நடைபெற உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தை அவருக்கு அர்ப்பணிக்கிறோம்,” என மும்பை இந்தியன்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதில் ஐந்து ஐபிஎல் கோப்பைகளுடன் ரோஹித் சர்மா இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு வாழ்த்தியுள்ளது அணி நிர்வாகம்.