சென்னை: ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது.
மணிரத்னம் இயக்கத்தில் லைகா தயாரித்துள்ள இந்தப் படம் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.
ஆனால், கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலுக்கும் மணிரத்னம் இயக்கியுள்ள படத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
முக்கியமாக இந்தப் படம் கல்கியின் பொன்னியின் செல்வன் இல்லையென்றும், இது ‘ஜெயமணிலைகாவின்’ பொன்னியின் செல்வன் எனவும் கலாய்த்து வருகின்றனர்.
அப்படி முகநூலில் நெட்டிசன்களால் பகிரப்பட்டு வரும் விமர்சனங்களை இங்கே பார்க்கலாம்.
ஜெயமணிலைகாவின் பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பொன்னியின் செல்வன் 2, நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தில், நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
PS என்றே சொல்லிவிடலாம். பொன்னியின் செல்வன் என்று சொன்னால் கொஞ்சம் குற்ற உணர்ச்சி மேலிடுவதாக நெட்டிசன் ஒருவர் விமர்சித்துள்ளார். மேலும், ஜெயமோகன் எதிர்பார்த்ததைப் போலவே கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை கற்பழித்திருக்கிறார். பலநாள் காழ்ப்புணர்ச்சி அல்லவா.? பொன்னியின் செல்வன் நாவலை வாசித்து அறியாதவர்கள், மணிரத்னத்தின் PS தமிழ் சினிமாவின் பிரைடு என்று சொல்லக்கூடும்.
இது சரித்திரம் ப்ரோ… வேற லெவல்… சான்ஸே இல்லை என்றெல்லாம் உணர்ச்சிவசப்படக் கூடும். கோடை விடுமுறையில் மீண்டும் ஒரு இண்டஸ்ட்ரீ ஹிட் என்று சினிமாக்காரர்கள் மகிழ்வடையலாம். சரி, பி எஸ் டூ வில் என்ன இருக்கிறது? நந்தினிக்கும் ஆதித்த கரிகாலனுக்கும் இடையேயான சிறுவயதுக் காதலை மணிரத்னம் மிகவும் நேர்த்தியாகச் சொல்கிறார்.
ஆனால் பின்பகுதியில் ஆதித்த கரிகாலன் கொலைக்கு முன்னர் அவரும் நந்தினியும் ஆசான் ஜெயமோகன் பக்கம் பக்கமாக எழுதிக் கொடுத்த காதல் வசனங்களைப் பேசியபடி நெருக்கம் காட்டுகிறார்கள். எங்கே ஆதித்த கரிகாலன் நந்தினிக்கு லிப்லாக் கொடுத்துவிடுவாரோ? என்ற பதட்டமே வந்துவிட்டது. இறக்கும் தருவாயில் இருவரும் கட்டித் தழுவிக் கொள்கிறார்கள். சிறு உடைவாளினால் ஆதித்த கரிகாலன் தன்னைத் தானே குத்திக் கொண்டு செத்துப் போகிறார்.
இதன்மூலம் PS 2 சொல்ல வருவது என்னவென்றால், பெண் பித்து முத்திப் போனதால் ஆதித்த கரிகாலன் தற்கொலை செய்துகொண்டு செத்துப் போகிறார். அது அரசியல் கொலை அல்ல. கருத்திருமன் பைத்தியம் போல ஒரேயொரு காட்சியில் வந்து செத்துப் போகிறான். அவன் யாரென்றே படம் பார்க்கும் யாருக்கும் புரியவில்லை.
கண்டராதித்தரின் மகன் மதுராந்தக உத்தம சோழன், குழந்தைகள் இடம் மாறியதால் சேந்தன் அமுதன் என்ற பெயரில் வளர்ந்து வருகிறான் என்பதும் படத்தில் இல்லை. கடைசிவரை இந்தப் PS 2 படத்திl சேந்தன் அமுதன் பூக்கட்டிக் கொண்டேயிருக்கிறான். பூங்குழலி ஆளையே காணோம். செம்பியன்மாதேவி பாண்டிய மன்னனின் மகனை மதுராந்தகன் என்ற பெயரில் வளர்த்து வருகிறாள் என்பதும் கதையில் இல்லை.
நேரடியாக அந்தக் கதாபாத்திரத்தையே கண்டராதித்தரின் மகன் என்று சொல்லிவிடுகிறார்கள். இறுதிக் காட்சியில் போர் வேண்டுமல்லவா? அதற்கு இராஷ்டிரகூட அரசர்கள் வருகிறார்கள். படு திராபையான போர்க்கள காட்சி அது எப்படியோ படம் முடிந்தால் போதும் என்று அவர்களும் நினைத்துவிட்டார்கள். நமக்கும் அப்படியே தோன்ற வைத்துவிட்டார்கள். அந்தவகையில் இது வெற்றியே!
சர்ச்சில் பாதிரியிடம் பாவமன்னிப்பு கேட்பது மாதிரி, பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களையும் பார்த்த பாவத்திற்கு கல்கியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். வாசிப்பு குறைந்து போன இந்நாளில் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் வரும் தலைமுறை, கல்கி இந்தப் படத்தைப் போலத்தான் நாவலும் எழுதியிருப்பார் என்று நம்பக்கூடும். ஜெயமோகன் என்ற பித்தலாட்டக்காரரின் பங்கு இதில் இருக்கிறது என்பதை அறியாமலே போகக்கூடும். இது வேதனைக்குரியது. இந்த ஊழ்வினை இவர்களைச் சும்மாவிடாது என விமர்சித்துள்ளார்.
தஞ்சையில் பிறந்து வெளிநாட்டில் வசித்து வரும் இன்னொரு நெட்டிசனும் பொன்னியின் செல்வன் படத்தை கடுமையாக ட்ரோல் செய்துள்ளார். அதில், ஒரு தஞ்சைப்பகுதி வாசியாக, சிறுவயதிலிருந்து பல்வேறு தடவை கல்கியின் பொன்னியின் செல்வன் வாசித்தவனாய், சோழதேசம் முழுக்கப் பயணம் செய்து கல்வெட்டுகள் எல்லாம் ஆய்வு செய்து பாலகுமாரன் எழுதிய உடையார் பலமுறை வாசித்தவனாய் இருந்துள்ளேன்.
யார் தஞ்சை வந்தாலும் பெரிய கோயில், அரண்மனை அழைத்துப் போய் விழிகள் விரிய அந்த வரலாற்றை விவரித்தவனாய் இருந்துள்ளேன். முதல் பாகத்துக்கு எழுதிய அதே வரிகளைத்தான் திருப்பிச் சொல்கிறேன். இது கல்கியின் பொன்னியின் செல்வனோ, பாலகுமாரனின் உடையாரோ இல்லவே இல்லை. ஜெயமணிலைகாவின் பொன்னியின் செல்வன்.. அவ்ளோதான் என சிம்பிளாக முடித்துவிட்டார். இந்த விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.