மும்பை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியான சல்மான் கானின் கிஸி கா பாய் கிஸி கி ஜான் படத்திற்கு ஐஸ்வர்யா ராயின் பொன்னியின் செல்வன் 2 பாக்ஸ் ஆபிஸில் சிம்ம சொப்பனமாக மாறி உள்ளதாக இந்தி பெல்ட்டில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
பான் இந்தியா படமாக பொன்னியின் செல்வன் படத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே பாலிவுட்டில் இருந்து ஐஸ்வர்யா ராயை நந்தினி கதாபாத்திரத்திற்கு நடிக்க வைத்திருந்தார் இயக்குநர் மணிரத்னம்.
மேலும், டோலிவுட் ரசிகர்களை கவர சோபிதா துலிபாலாவும், மலையாள ரசிகர்களை கவர ஐஸ்வர்யா லக்ஷ்மியையும் படத்தில் இணைத்திருந்தார்.
ஐஸ்வர்யா ராயின் பொன்னியின் செல்வன்: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் இருவர், ராவணன், குரு உள்ளிட்ட படங்களில் நடித்த அழகு ஐஸ்வர்யா ராய் இந்த படத்தில் நந்தினியாகவும் ஊமை ராணி மந்தாகினியாகவும் இரட்டை வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
ஆதித்த கரிகாலன் உடன் கடம்பூர் மாளிகையில் நடக்கும் அந்த ப்ரீ கிளைமேக்ஸ் காட்சி தான் படத்தின் மிகப்பெரிய ஹை பாயின்ட்டாகவே உள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஊமை ராணியாக சுந்தரச் சோழரை காப்பாற்றும் காட்சிகளில் எமோஷனல் டச் இருப்பதாகவும், ஆதித்த கரிகாலன் உடன் கண்களாலே பேசி க்ளோஸ் அப் காட்சியில் மூக்குத் துடிக்க நடித்து ரசிகர்களை ஒட்டுமொத்தமாக ஐஸ்வர்யா ராயின் பொன்னியின் செல்வனாகவே மாற்றி விட்டார் என கமெண்ட்டுகள் பறக்கின்றன.
சரிந்தது சல்மான் கான் பட வசூல்: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 21ம் தேதி வெளியான சல்மான் கானின் கிஸி கா பாய் கிஸி கா ஜான் 9 நாள் ஆகியும் முக்கி முக்கி 91 கோடி ரூபாய் தான் வசூல் வந்திருக்கிறது. இதில், சல்மான் கான் சம்பளம் மட்டும் 125 கோடி என்கின்றனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை பொன்னியின் செல்வன் 2 வெளியான நிலையில், வரலாற்று படமான பொன்னியின் செல்வன் 2வை பார்க்க பாலிவுட் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், 2 கோடி ரூபாய் அளவுக்குத்தான் சல்மான் கானின் கிஸி கா பாய் கிஸி ஜான் படத்திற்கு வசூல் வந்துள்ளது என்றும் 100 கோடியை கடப்பதே பெரும் சிரமமாக இருக்கப் போகுது என்றும் பாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் விமர்சித்து வருகின்றனர்.
முன்னாள் காதலி: பாலிவுட் நடிகர் சல்மான் கானின் முன்னாள் காதலியாக ஐஸ்வர்யா ராய் இருந்ததாகவும் அவருக்கு சல்மான் கான் ஏகப்பட்ட டார்ச்சர் கொடுத்து வந்த நிலையில், தான் அவரை விட்டுப் பிரிந்து அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை ஐஸ்வர்யா ராய் திருமணம் செய்துக் கொண்டார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், சல்மான் கானின் வசூல் சாம்ராஜ்யத்தை மாஜி காதலியான ஐஸ்வர்யா ராய் சரித்து விட்டார் என்றும் பேச்சுக்கள் எழுந்துள்ளன.