Tamil News Live Today: “இயந்திரம் மூலம் மது விற்பனை செய்வது வெட்கக்கேடானது'' – திமுக-வைச் சாடிய இபிஎஸ்

“இயந்திரம் மூலம் மது விற்பனை செய்வது வெட்கக்கேடானது” – தி.மு.க-வைச் சாடிய இபிஎஸ் 

தானியங்கி இயந்திரம் மூலம் மதுபான விற்பனையைத் தொடங்கியிருக்கும், தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இளைஞர்களைச் சீரழிக்கும் வகையில் தானியங்கி இயந்திரம் மூலம், மதுபான விற்பனையைத் தொடங்கியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது” எனத் தெரிவித்திருக்கிறார்.

ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்! 

ஆருத்ரா கோல்டு மோசடியில் எனக்குத் தொடர்பிருப்பதாக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறிய கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என அண்ணாமலை, ஆர்.எஸ்.பாரதிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

Dmk files: அண்ணாமலைக்கு கனிமொழி எம்.பி நோட்டீஸ்!

தி.மு.க-வினரின் சொத்துப் பட்டியலை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்ட விவகாரம் தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு, கனிமொழி எம்.பி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

வி.ஏ.ஓ படுகொலை வழக்கு; விசாரணை அதிகாரி நியமனம்! 

கொலைசெய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ்

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியாக தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி சுரேஷை நியமனம் செய்து தென் மண்டல ஐ.ஜி அஷ்ரா கார்க் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு – நீதிபதி மாற்றம்! 

கொடநாடு பங்களா

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்துவந்த நீலகிரி மாவட்ட நீதிபதி முருகன், சேலம் மாவட்டத் தொழிலாளர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக புதுக்கோட்டை மாவட்ட நீதிபதி அப்துல் காதர் புதிய மாவட்ட நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

பேனா நினைவுச்சின்னம்:  “சட்டப் போராட்டம் முன்னெடுக்கவிருக்கிறோம்!” – சீமான்

சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி அளித்திருக்கிறது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு விதிகளுக்குப் புறம்பாக ஒன்றிய நிபுணர்குழுவினர் அனுமதி அளித்திருப்பது மக்களாட்சி முறைக்கு எதிரான செயல். சூழலியலுக்கு எதிரான மாநில அரசின் இந்தத் திட்டத்துக்கு ஒன்றிய அரசின் குழு விரைந்து அனுமதி அளித்திருப்பது அவர்களின் ஒருங்கிணைந்த மக்கள் விரோதப் போக்கைக் காட்டுகிறது.

சீமான்

மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்பதை எடுத்துக்கொள்ளாமல் அனுமதி வழங்கப்பட்டிருப்பது மக்களின் கருத்தை ஒன்றிய, மாநில அரசுகள் துளியும் மதிப்பதில்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மக்கள் விரோத – சூழலியல் விரோத இந்தத் திட்டத்தை எதிர்த்து அடுத்ததாக நாம் தமிழர் கட்சி சட்டப் போராட்டம் முன்னெடுக்கவிருக்கிறது என்று அறிவிக்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

`மதிமுக-வை திமுக-வுடன் இணைத்துவிடலாம்!’ – வைகோவுக்கு மதிமுக அவைத்தலைவர் கடிதம் 

வைகோ

`மதிமுக-வை திமுக-வுடன் இணைத்துவிடலாம்’ என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அந்தக் கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியிருக்கிறார். மேலும் அவர், “மதிமுக-வை தாய்க் கழகமான திமுக-வுடன் இணைத்துவிடுவது சமகால அரசியலுக்குச் சாலச் சிறந்தது. மகனை ஆதரித்து அரவணைப்பதும், சந்தர்ப்பவாத அரசியலும் மக்களை எள்ளி நகையாட வைத்துவிட்டது” எனக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

மதிமுகவை திமுகவோடு இணைக்கலாம்- மதிமுக அவைத் தலைவர் சு.துரைசாமி

பேனா நினைவுச்சின்னம் – நிபந்தனைகளுடன் அனுமதி அளித்த மத்திய அரசு!

சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு, அதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. தமிழகத்தில் பல்வேறு எதிர்க்கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், நினைவு பேனா சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பியிருந்தது.

கருணாநிதி பேனா நினைவுச்சின்னம்

இந்த நிலையில் சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஏப்ரல் 17-ம் தேதி நடைபெற்ற சுற்றுச்சூழல் அமைச்சகக் கூட்டத்தில் இதற்கான அனுமதி கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அதில் சில நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. குறிப்பாக ஐஎன்எஸ் கடற்படை அனுமதி பெற வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகள் அதில் இடம்பிடித்திருக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.