ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தையொட்டிய பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனை தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்கள் உறுதி செய்துள்ளன. அதாவது இன்று அதிகாலை 5.15 மணி அளவில் 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பெரும்பாலான பகுதிகள் மலைகள் சூழ்ந்த பகுதிகள் என்பதால் இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டால் மண் சரிவதற்கான வாய்ப்பும் அதிகம் இருக்கிறது.
இந்த யூனியன் பிரதேசத்திற்கு உணவு முதல் பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் சாலை மார்க்கமாகவே கொண்டு செல்லப்படுகிறது. இப்படி இருக்கையில் மண் சரிவு சாலை போக்குவரத்தை முற்றிலுமாக துண்டித்துவிடும். ஆனால் இதில் ஒரு நல்ல விஷயம் என்னவெனில் தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் இவ்வளவு சக்திவாய்ந்தது கிடையாது என்பதுதான். இருப்பினும் ஜம்மு காஷ்மீர் அடிக்கடி நில அதிர்வு ஏற்படும் மண்டலத்தில் இருப்தால் இங்கு ஏற்படும் எதிர்பாராத பேரிடரிலிருந்து மக்களை மீட்க அதிநவீன அவசர செயல்பாட்டு மையங்கள் அமைக்கப்பட இருக்கிறது.
ஜம்மு காஷ்மீரின் 20 மாவட்டங்களிலும் இந்த அதிநவீன அவசர செயல்பாட்டு மையங்கள் விரைவில் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் கடந்த 2019ம் ஆண்டிலிருந்தே தொடங்கப்பட்டுவிட்டது என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதேபோல பேரிடர் மீட்பு அவசர எண்ணாக 112ஐ அறிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நிலநடுக்கத்தை பொறுத்த அளவில் ரிக்டர் அளவில் 5க்கு மேல் பதிவானால் லேசான பாதிப்புகள் இருக்கும். இதே 6க்கு மேல் பதிவானால் உயிரிழப்புகள் ஏற்படும். இந்த அளவு 7 அல்லது அதற்கும் மேல் பதிவானால் நிச்சயம் பேரிடர் பாதிப்புதான் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.