அன்புமணி: போராடாம நமக்கு எதுவும் கிடைக்காது.. வாங்க ஒன்றுபடுவோம்.!

உலகம் முழுவதும் நாளை உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் பாட்டாளி வர்க்கதினருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்

வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘‘அடிமைகளாய் நடத்தப்பட்டவர்களை மனிதர்களாய் மாற்றிய மே நாளைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள பாட்டாளிகளுக்கு உளமார்ந்த தொழிலாளர்கள் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகத்தின் ஆக்கும் சக்திகள் என்றால் அவர்கள் தொழிலாளர்கள் தான். தேனீக்கள் எவ்வாறு காடுகள் தோறும், தோட்டங்கள் தோறும் சுற்றிச்சுழன்று தேனை சேகரித்து வந்து தேன் கூடுகளை அமைக்கின்றனவோ, அதே போல் தான் தொழிலாளர்கள் இந்த உலகின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்துக் கட்டமைப்புகளையும் உருவாக்கியுள்ளனர். உழைப்பாளர்கள் இல்லை என்றால் உலகம் இல்லை என்பது தான் உண்மை. அவர்கள் அனைத்து உரிமைகளும் வாழ வேண்டும் என்பதே எனது நோக்கம்.

ஆனால், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் வழங்கப்படவில்லை. கடந்த காலங்களில் மறைமுகமாக மறுக்கப்பட்ட உரிமைகள் இப்போது நேரடியாகவே மறுக்கப்படுகின்றன. உலகத் தொழிலாளர்கள் நாள் கொண்டாடப்படுவதன் காரணமே தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வேலைநேரம் இல்லாத அவலநிலையை மாற்றி, 8 மணி நேர வேலை என்ற உரிமை வென்றெடுக்கப்பட்டதை குறிப்பதற்காகத் தான்.

ஆனால், நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணியாக உயர்த்தி மனிதர்களை அடிமைகளாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தற்காலிகமாக தடுக்கப்பட்டிருந்தாலும், முற்றிலுமாக முறியடிக்கப்படவில்லை. அதற்காக தொடர்ந்து போராட வேண்டும்.

பாட்டாளிகளே.. மனித நீதியாக இருந்தாலும், சமூக நீதியாக இருந்தாலும் நீங்கள் போராடாமல் உங்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க முடியாது. இதை உணர்ந்து நமக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள் அனைத்தையும் வென்றெடுக்க ஒன்றுபடுவோம்; போராடுவோம்; வெற்றி பெறுவோம் என்று கூறி, மீண்டும் ஒரு முறை பாட்டாளிகள் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.