சென்னை: ஆருத்ரா கோல்டு மோசடியில் ரூ.84 கோடி பெற்றதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக கூறி, ரூ.501 கோடி இழப்பீடு கேட்டு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
திமுக அமைப்புச் செயலாளர்ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை சார்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் அனுப்பியுள்ள வழக்கறிஞர் நோட்டீஸில் கூறியிருப்பதாவது:
ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை சமூகத்தையும், மக்களையும் ஊழலில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற சீரிய சிந்தனையுடன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இளவயதில் பாஜக மாநில தலைவராக பதவிக்கு வந்தவர். அவர் திமுகவினர் சொத்துப் பட்டியலை வெளியிட்டதும், அதற்கு பதிலுக்கு பதிலாக அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆருத்ரா கோல்டு மோசடியில் ரூ.84 கோடியை அவர் நேரடியாக பெற்றுள்ளதாக ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார். இது, அண்ணாமலையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்.
ஊழலுக்கு எதிரான சிந்தனை கொண்ட அண்ணாமலை, ஆர்.எஸ்.பாரதியின் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார். அத்துடன் இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது. அவதூறானது. உண்மைக்குப் புறம்பானது. ஆருத்ரா மோசடியில் அண்ணாமலையும், அவரது கூட்டாளிகளும் ரூ. 84 கோடி பெற்றுள்ளதாக கூறியுள்ள ஆர்.எஸ்.பாரதி, கூட்டாளிகள் யார், யார் மூலமாக எவ்வளவு தொகை பெற்றார் என்ற எந்த விவரங்களையும் கூறவில்லை.
மேலும், இந்த குற்றச்சாட்டை பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறியதன் அடிப்படையில் கூறுவதாக ஆர்.எஸ்.பாரதியே ஒப்புக்கொண்டுள்ளார். அண்ணாமலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக ஆர்.எஸ்.பாரதி பகிரங்க பொது மன்னிப்பு கோர வேண்டும். இதுதொடர்பான வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் அத்துடன் அவர் ரூ.501 கோடியை பிரதம மந்திரியின் நிவாரண நிதிக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் ஆர்.எஸ்.பாரதி மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.