புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி இன்று காலை வானொலியில் ஒலிபரப்பாகிறது. நாடு முழுவதும் 4 லட்சம் இடங்களில் இந்த நிகழ்ச்சியை ஒலிபரப்பு செய்ய பாஜக ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம்நாட்டின் பிரதமராக நரேந்திர மோடிபதவியேற்றார். அதே ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி அகில இந்தியவானொலி மற்றும் தூர்தர்ஷன் மூலம் மனதின் குரல் நிகழ்ச்சியில் அவர் முதல் முறையாக உரையாற்றினார். அப்போதுமுதல் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே அவர் உரையாற்றி வருகிறார்.
அந்த வகையில், 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு ஒலிபரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சி, தனியார் பண்பலை உட்பட 1,000 வானொலி நிலையங்கள் மற்றும் பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது.
இதுபோல பாஜக சார்பில் நாடு முழுவதும் 4 லட்சம் இடங்களில் மனதின் குரல் நிகழ்ச்சியை ஒலிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து பாஜக பொதுச்செயலாளர் துஷ்யந்த் கவுதம் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியை நாட்டு மக்கள் அனைவரிடமும் கொண்டு செல்ல பாஜக ஏற்பாடு செய்திருக்கிறது. அந்தந்த மாநிலங்களின் பாஜக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மனதின் குரல் நிகழ்ச்சியை மக்கள் கேட்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இதன்படி ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் குறைந்தபட்சம் 100 இடங்களில் மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நிகழ்ச்சி ஒலி பரப்பு செய்யப்படும்.
அனைத்து மாநிலங்களின் ஆளுநர் மாளிகைகளில் மனதின் குரல் ஒலிபரப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதில் பத்ம விருது பெற்றவர்கள், முக்கிய பிரபலங்கள் பங்கேற்பார்கள். பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் முதல்வர்களின் வீடுகளில் மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்புசெய்யப்படும். இந்த நிகழ்ச்சிகளிலும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பார்கள். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்க வேண்டும் என்ற அடிப்படையில் ஏற்பாடுகளை செய்துள்ளோம். நிகழ்ச்சி ஏற்பாடு களை கட்சித் தலைவர் நட்டா கண்காணித்து வருகிறார். இவ்வாறு துஷ்யந்த் கவுதம் தெரிவித்தார்.
100-வது மனதின் குரல் நிகழ்ச்சியை ஒட்டி சிறப்பு அஞ்சல் தலை மற்றும் 100 ரூபாய் நாண யத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் வெளியிட்டார். இந்த நாணயம் மற்றும் அஞ்சல் தலையில் மனதின் குரல் நிகழ்ச்சியின் லோகோ அச்சிடப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேரடியாக ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. மேலும் நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மற்றும் அமெரிக்கவாழ் இந்தியர்கள் சங்கத்தின் சார்பாக நியூஜெர்சி நகரிலும் பிரதமரின் உரை ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது.
பிரசார் பாரதி தலைமை செயல் அதிகாரி கவுரவ் துவிவேதி கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடி இந்தி மொழியில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசுகிறார். அவரது நிகழ்ச்சி 22 இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு ஒலிபரப்பு செய்யப் பட்டு வருகிறது. அதோடு ஆங்கிலம் உள்ளிட்ட 12 வெளிநாட்டு மொழிகளிலும் ஒலிபரப்பாகிறது. 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியும் இதே நடைமுறையில் ஒலிபரப்பு செய்யப்படும். இந்தியா மட்டு மன்றி உலகம் முழுவதும் பிரதமர்மோடியின் வானொலி நிகழ்ச்சி சென்றடையும்’’ என்று தெரிவித்தார்.
இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனரும் உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “சுகாதாரம், தூய்மை, பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் நிலையான வளர்ச்சி இலக்கு தொடர்புடைய இதர பிரச்சினைகளுக்கு தீர்வு காண மனதின் குரல் நிகழ்ச்சி ஊக்கமளித்து வருகிறது. 100-வது நிகழ்ச்சிக்கு வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.